உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழர் சரித்திரச் சுருக்கம்

69

கலப்பில்லாமலும் போக்குவரவுக்குரிய பெருவழிகளில்லாமலும் வாழ்ந்து வந்தனர். மரமடர்ந்த மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி; மரமடராத காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; கடுங்கோடைக் காலத்தில் குறிஞ்சியும் முல்லையும் வறண்டநிலை பாலை; நீர்வளமுள்ள நாடும் நாடு சார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்.

முதலாவது தமிழர் குறிஞ்சிநிலத்தில் மட்டுமிருந்து பின்பு, முறையே, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்ற திணைநிலங்கட்குச் சென்றதாகத் தெரிகின்றது. இந் நிலங்களில் வாழ்க்கையும் தோற்றமும் பின்வருமாறிருந்தன.

குறிஞ்சி: தெய்வம், முருகன் அல்லது சிவன்; உணவு, ஐவனநெல்லும் தினையும் மூங்கிலரிசியும்; விலங்கு, யாளியும் புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமும் தேக்கும் திமிசும் வேங்கையும்; பறவை, கிளியும் மயிலும்; பறை (மேளம்), முருகியமும் தொண்டகப்பறையும்; தொழில், தேன் எடுத்தலும் கிழங்கு தோண்டுதலும் தினை முதலியன விளைத்தலும் கிளியோட்டுதலும்; யாழ் (இசை அல்லது பண்), குறிஞ்சியாழ்; பூ, காந்தளும் வேங்கையும் சுனைக்குவளையும்; நீர்நிலை, அருவியும் சுனையும்; ஊர், சிறுகுடியும் குறிச்சியும்.

முல்லை: தெய்வம், திருமால்; உணவு, வரகும் சாமையும் முதிரையும்; விலங்கு, உழையும் (ஒருவகை மான்) புல்வாயும் முயலும்; மரம், கொன்றையும் குருந்தமும்; பறவை, காட்டுக்கோழியும் காடையும்; பறை, ஏறுகோட்பறை; தொழில், ஆடுமாடு மேய்த்தலும் வரகு முதலிய பயிர்கட்குக் களையெடுத்தலும் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ்; பூ, முல்லையும் பிடவும் தளவும் தோன்றியும்; நீர்நிலை, கானாறு; ஊர், பாடியும் சேரியும் பள்ளியும்.

பாலை:தெய்வம், காளி; உணவு, வழிபறித்ததும் சூறைகொண்டதும்; விலங்கு, வலிமையற்ற யானையும் புலியும் செந்நாயும்; மரம், வறண்ட இலுப்பையும் உழிஞையும் ஞெமையும்; பறவை, கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறைகோட்பறையும், நிரைகோட்பறையும்; தொழில், வழிபறித்தலும் சூறை கொள்ளுதலும்; யாழ், பாலையாழ்; பூ, மராவும் குராவும் பாதிரியும்; நீர்நிலை, வற்றின கிணறும் சுனையும்; ஊர், பறந்தலை.

நெய்தற்கு: தெய்வம், வரணன் (கடலோன்); உணவு, மீனையும் உப்பையுங் கொடுத்துப் பெற்றவை; விலங்கு, உப்புப் பொதியெருது; மரம், புன்னையும் ஞாழலும் கண்டலும்; பறவை, அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன்கோட்பறை; தொழில், மீன்பிடித்தலும் உப்புவிளைத்தலும் அவற்றை விற்றலும்; யாழ், நெய்தல்யாழ்; பூ, தாழையும் நெய்தலும்; நீர்நிலை, மணற்கிணறும், உவர்நீர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.

7

மருதம்: தெய்வம், வேந்தன் (இந்திரன்); உணவு, செந்நெல்லும் வெண்ணெல்லும்; விலங்கு, எருமையும் நீர்நாயும்; மரம், வஞ்சியும் காஞ்சியும் மருதமும்; பறவை, தாராவும் நீர்க்கோழியும்; பறை, மண்முழவும் நெல்லரி நிரை-பசு மந்தை.