உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

தமிழர் திருமணம்

போன்றே, மதப்பொறுதி யிருந்துவந்தது. கடைத் தமிழ்ச் சங்கத்தில் சைவர், வைணவர் (மாலியர்), பௌத்தர், சமணர், உலகாயதர் முதலிய பல மதத்தினரும் புலவரா யிருந்தனர். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் வைணவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயும் இருந்தனர். இங்ஙனம் பல மதத்தினரும் ஒற்றுமையாய் வாழ்ந்ததால், தமிழ்நாட்டில் அமைதி நிலவியது; கல்வியும், கைத்தொழிலும், வாணிகமும், அரசியலும் ஓங்கி நாடு நலம்பெற்றது. இக்காலத்திலோ, சில குறும்பர் மதப்பிரிவினை யுண்டாக்கித் தமிழ்நாட்டைச் சீர்குலைக்கின்றனர்.

இனி, இக்காலத்தில் சில தமிழர் மதப்பித்திற்கு நேர்மாறாக மதமே இருக்கக்கூடா தென்கின்றனர். மதத்திலுள்ள சில தீய கூறுகளை நீக்குவதற்குப் பதிலாக, மதத்தையே நீக்கவேண்டுமென்பது சோற்றிலுள்ள சில சிறு கற்களை எடுப்பதற்குப் பதிலாகச் சோற்றையே கொட்டிவிடுவ தொக்கும்.

2. கொடைமடம்

மிகுந்த வளத்தினாலும், முதலியற் (primitive) குலத்தினாலும், வழிமுறை (பரம்பரை) வேளாண்மையாலும், தமிழர் சிறந்த கொடையாளிகளா யிருந்தது பாராட்டத்தக்கதே. ஆனால், அவருட் சிலர் தகுதி பாராதும் மிதமிஞ்சியும் தானம் செய்தது அங்கணத்திற் கொட்டிய அமிழ்துபோலப் பயன்படா தொழிந்ததன்றி, அவரை மடமையராகவும் காட்டுகின்றது.

கடையெழு வள்ளல்கள் என்று புகழப்படுவாருள், பேகன் என்பவன் தனக்கு அருமையாகக் கிடைத்த ஒரு சிறந்த போர்வையைக் குளிரால் நடுங்குகிறதென்று கருதி ஒரு மயிலின்மீ தெறிந்ததும், பாரி என்பவன் ஒரு முல்லைக்கொடிக்குக் கொழுகொம் பில்லையென்று தன் விலையுயர்ந்த தேரை நிறுத்தியதும், தமிழன் கொடைமடத்திற்கு எடுத்துக்காட்டு (உதாரணம்) களாகும்.

தமிழன் மதத்திலும் கொடையிலும் பைத்தியங் கொண்டவன் என்று தெரிந்த பார்ப்பனர், மதாசிரியராகிக் கோயில் வழிபாட்டாலும் இல்லச் சடங்கா லும் ஏராளமாய்க் காணியும் பொருளும் தேடிக்கொண்டனர். சில அரசர்கள் அளவிறந்த தமிழ்ப் பற்றுடையவராயும் புலவரைப் போற்றுபவராயு மிருந்ததால், சில பார்ப்பனர் தமிழ்ப் புலவருமாகிப் பல்லாயிரக் கணக்கான பொற்காசுகளை யும் நூற்றுக்கணக்கான ஊர்களையும் பரிசிலாகப் பெற்றிருக்கின்றனர். இது குற்றமன்று; ஆனால், இங்ஙனம் அவர் பெறுதற்கு, அவர்தம் குலத்திற்கு உ யர்வுதேடிக் கொண்டமையும் ஒரு காரணம் என்பதையும், அவர் தமிழ் கற்றது பெரும்பாலும் தம் பிழைப்பிற்கும் தமிழ்நாட்டில் தமக்கு ஆதிக்கம் தேடிக் கொள்வதற்கும் ஆரியத்தைச் சிறிது சிறிதாய்ப் புகுத்தித் தமிழைக் கெடுத்தற் குமே யென்பதையும், அறிய வேண்டும்.

"ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு” என்பது பழமொழி வளவனாயினும் அளவறிந் தழித்துண்ண வேண்டுமன்றோ? சில தமிழரசரோ அங்ஙனமன்றித் தமக்குரிய நாடு நகரையும் செல்வமனைத்தையும் தானம் செய்து விட்டுப் பின்பு திண்டாடி யிருக்கின்றனர். இதைப் புறநானூற்றிற் காணலாம்.