உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம் இலக்கணம்

133

வேற்றுமைப்படுத்தினர் தமிழ் முதனூலாசிரியர். ஒரு கருவி கொண்டு ஒரு வினை செய்யும்போது அக் கருவி செய்வா னுடனிருப்பதையும், ஒருவன் மற்றொருவனுடன் கூடி ஒரு வினை செய்யும் போது அம் மற்றொருவன் துணையாய் நின்று கருவிப்படுவதையும், கூர்ந்து நோக்குக. இனி, வழக்கு வருமாறு:

ஆன் (ஆல்) உருபு:

மண்ணான் இயன்ற குடம் கருவி ஊரான் ஒரு கோவில் உடனிகழ்ச்சி

ஒடு உருபு:

ஊசியொடு குயின்ற தூசு கருவி

நாயொடு நம்பி வந்தான் - உடனிகழ்ச்சி

ஆங்கிலத்திலும் இவ் வழக்கு ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. with (ஒடு): Write with a pen - கருவி

Went with him உடனிகழ்ச்சி

By (ஆல்) Live by bread - கருவி

Stand by him - உடனிகழ்ச்சி

இங்ஙனமே, 5ஆம் வேற்றுமைக்குரிய நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கும் நீக்கப்பொருள் வேறுபாடுகளே. இங்கு ஒப்பு என்பது உறழ்பொருவை (Comparative Degree). இவற்றை விரிப்பிற் பெருகும். என் தமிழ் வரலாற்றில் கண்டு கொள்க.

3ஆம் வேற்றுமைக்குக் கருவிப் பொருளுடன் உடனிகழ்ச்சிப் பொருள் வடமொழியிலுமுள்ளது. இஃதை, "இனிச் சகார்த்தமாய் வந்த திருதியைச் சகார்த்தத் திருதியை என்றும், சகார்த்தமென்றும்...... கூறுவர்” என்னும் பிரயோக விவேக உரையாலும் (பக்கம், 11), "புத்ரை: ஸஹ க்ராமம் கச்சதி ஹரி” என்னும் சொற்றொடர் பற்றி, “ஸஹ governs the instrumental” என்று இராமகிருட்டிண கோபால பந்தர்க்கார் தம் சமற்கிருத முதற் புத்தகத்தில் (ப.24) எழுதியிருக்கும் அடிக்குறிப்பாலும், அறிக.

இனி, தமிழில் எத்தனை உருபோ அத்தனை வேற்றுமை என்று கால்டுவெல் கண்காணியார் கூறியிருப்பது, கண் கால் கடை யிடை முதலிய இடப்பொருளுருபுகள் பற்றியோ பல்வேறு வேற்றுமை பற்றிவரும் சொல்லுருபுகள் பற்றியோ, அறிகிலம். எதுபற்றியதாயினும் அவர் கூற்றுப் பொருளற்றதென்பது தெளிவாம். பொருள்களிடைப்பட்ட உறவு வேறுபாடு எட்டே வகைப்படுமென்பது, இலக்கண முறையாலன்றி ஏரண முறையாலும் தெளிந்ததே. எட்டிற்கு மேற்பட்டவையெல்லாம் கூட்டும் கலவையுமா யிருக்குமே யன்றித் தனிப்பட்டவையாயிரா.