உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

மீன மாதம் 5ஆம் பக்கல் (18.3.1969) 'மெயில்' தாளில் பின்வருமாறு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

பள்ளிகளிற் சமற்கிருதம்

விருப்பப் பாடமாகுமாறு நெருக்கப்படுதல்

"இந்தியச் சமற்கிருத மொழிக்கழகம், சமற்கிருதத்தை வழிநிலைக் கல்வியில் (Secondary Education) எந்த நிலையிலாவது மீண்டும் விருப்பப் பாடமாக்குமாறு, தமிழ்நாட்டு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

'அக் கழகம் முதலமைச்சருக்கு விடுத்த வேண்டுகோள் மடலில், சமற்கிருதத்தை 10ஆம் 12ஆம் வகுப்புகளில் மட்டும் தெரிப்புப் பாடமாகக் கற்குமாறு இன்றுள்ள ஏற்பாடு 'நிரம்பக் குறைவானது' என்று கூறியுள்ளது. 6ஆம் வகுப்பிலிருந்தே அதைக் கற்குமாறு ஏற்பாடிருத்தல் வேண்டும்.

"மா பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சமற்கிருதம் கற்கப்பட்டு வருவதாக அக் கழகம் கூறியுள்ளது. பத்தாயிரத் திற்கும் குறையாத பாடசாலைகளில், வாழ்நாள் முழுதும் சமற்கிருதக் கல்வி யேற்றுக்கொண்ட ஆடவர், அம் மொழியை வழங்கும் கல்வி வாயிலாகவே ஆள்கின்றனர். இத் தேயத்தில் ஐம்பதினாயிரவர்க்குக் குறையாது அதில் விரைவாகப் பேசுகின்றனர்.

“பலர் பூசாரித் தொழிலை மேற்கொண்டு இந்துமதப் பண்பாட்டுக் காவலராகத் தொண்டு புரிகின்றனர். பத்திலக்கத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்க்கை, பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிற் சமற்கிருதத்திற் சமயச் சொலவங்களை மன்றாட்டு வடிவில் எதிரொலிக்கிறது.

"பண்டைக் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கக் கணிதம் (Algebra), வடிவுக் கணிதம் (Geometry), முக்கோணக் கணிதம் (Trignometry), அறிவியல் (Science) ஆகியவற்றை விளக்கும் நூல்களிருந்தன. அணுவியற் கொள்கை முதன்முதல் சமற்கிருத நூல்களில் இடம்பெற்றது. இக்காலத்தில் மேனாடு இந்திய மெய்ப்பொருளியற் கருத்துகளை மேன்மேலுங் கடன்கொண்டு வருகின்றது. சமற்கிருதக் கல்வி மாணவர் களுக்குக் கவர்ச்சி யுண்டாக்குமாறு தக்க பாடத்திட்டம் வகுக்கப்படுதல் வேண்டுமென்று, அவ் வேண்டுகோள் மடல் கூறுகின்றது."