உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தென்சொற் கட்டுரைகள்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்டிர் இளம்பருவத்தை எழுநிலையாகவும்; ஊடல், புலவி, துனி என மனைவியர் சடைவை முந்நிலையாகவும்; வகுத்துக் கூறியது தமிழல்லாது வேறு எம்மொழி?

இன்றும் ஆங்கிலமும் சமற்கிருதமும் அறியாத நாட்டுப்புறத் தமிழ் மக்கள் கொசுவும் உலங்கும் வேறென்றும், பொறியும் (Machine) சூழ்ச்சியமும் (Engine) வேறென்றும் அறிந்திருப்பது, அவர் முன்னோர் மொழியின் சிறப்பை யுணர்த்தும். கொசு பகலில் வழங்குவது; கடியாதது; கண்ணிலும் புண்ணிலும் அழுகற் பழத்திலும் மொய்ப்பது; உலங்கு இரவில் வழங்குவது; கடிப்பது. அதிற் சிறியது நுளம்பு.

யானையைக் குறிக்க ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கடமா, கம்பமா, கரி, கவளமா, கடிவை, கறையடி, கைம்மலை, கைம்மா, சிந்துரம், தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பகடு, பிணிமுகம், புகர்முகம், புழைக்கை - பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மருண்மா, மறமலி, மொய், வழுவை, வாரணம், வேழம் முதலிய பல தூய தென்சொற்கள் உள்ளன.

ஆயம், கிளை, எழிலி, கனம், கார், காளம், குயின், கொண்டல், கொண்மூ, செல், புயல், மங்குல், மஞ்சு, மாசு, மால், முகில், மை, வான் – வானம், விண் விண்டு முதலிய சொற்கள் முகிலைக் குறிக்கப் பயிலப் பெறுகின்றன.

முதலையை இன்று அலிகேற்றார் (Aligator), கிராக்கொடைல் (Crocodile), கேவியல் (Gavial) என்று மேலை யறிஞர் மூவகையாக வகுத்திருப்பது போன்றே, பண்டைத் தமிழரும் தமிழகத்து முதலையை இடங்கர், கராம், முதலை என மூவகையாக வகுத்திருந்தனர்.

உண்ணல், தின்னல், நக்கல், பருகல், சப்பல், விழுங்கல் என்னும் அறுவகை யுண்டிகளையும் பண்டைத் தமிழர் அறிந்து, அவற்றை அவற்றிற்குரிய சொல்லாற் குறித்தனர். ஆரியரொடு பழகி அறிவிழந்த இற்றைத் தமிழனே சோறு தின்னல் என்றும், குளம்பி (காப்பி) சாப்பிடுதல் என்றும், மரபு தவறி வழங்குகின்றான்.

இனி, சமற்கிருதத்திலுள்ள ஒருபொருட் பல சொற்களுள் பாதி தமிழும் திரவிடமும் ஆகுமென்றும்; பொதுச்சொற்களுள் ஐந்திலிரு பகுதி தமிழும், ஒரு பகுதி திரவிடமும், ஒரு பகுதி பிராகிருதமும், ஒரு பகுதியே ஆரியமும் ஆகும் என்றும் அறிக.

6

தீர்பு:

சமற்கிருதம் பட்டை தீர்ந்த மணிபோலத் தீர்புள்ளதென்று கொண்டு, 'ஸம்ஸ்க்ருத' என்ற சொல்லே பண்பட்டதென்று பொருள் படுவதாகக் கூறியுள்ளார் கட்டுரையாளர். ஸம்ஸ்க்ருத என்னும் சொற்கு ஒன்றுசேர்க்கப் பட்டது என்பதே அடிப்படைப் பொருளாம். இச் சொல் ஸம்-க்ரு என்று