உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

என் பெயர் என்சொல்?

மொழியைப் பொறுத்தவரையில் நான் மறைமலையடிகளை முற்றும் அடியொற்றிச் செல்பவனாயிருந்தும், தமிழ்ப் பேராசிரியர் பலரும் மொழியாராய்ச்சியின்மையானே என் பெயரையும் வடசொல்லென ஐயுற்றும் வருகின்றனர். அவர் மயக்கறுப்பான் எழுந்ததிக் கட்டுரை.

1. தேவன்

எக்காலத்தும் மாந்தர் தெய்வ வழிபாடாற்றுதற்குக் காரணம், நன்மை செய்யும் பொருளிடத்து அன்பும், தீமைசெய்யும் பொருளிடத்து அச்சமுமே. எல்லாம் வல்ல இறைவன் வழிபாட்டில் இவ் விரு மெய்ப்பாடுகளும் கலந்துள்ளன. இறைவன் இறுதியில் பேரின்பந் தருவான் என்பது நன்மை யும், எரிநிரயத்தில் இடுவான் என்பது தீமையும் பற்றிய உணர்ச்சிகளாகும்.

வெளியொழிந்த நாற்பூதங்களுள் ஒவ்வொன்றும் நன்மையும் தீமையுஞ் செய்யுமேனும், அவற்றுள் தீயே அவற்றைச் சிறப்பாக அல்லது தெளிவாகச் செய்வதாம். அதனால், முதற்கால மாந்தர் அதனையே சிறந்த தெய்வமாகப் போற்றிவந்தனர். அதுபற்றித் தெய்வப் பொதுப்பெயரும், முழுமுதற் கடவுட்பெயரும் தீப்பெயரினின்று தோன்றியுள்ளன.

கட்புலனைப் பயன்படுவிக்கும் ஒளியும், சமையற்கு வேண்டும் சூடும், குளிரைப் போக்கும் வெம்மையும், உணவுப் பயிர்க்கு வேண்டும் வெப்பமும், தீயினால் உண்டாகும் நன்மைகளாம்; தீண்டினாற் சுடுவதும், அகப்படின் எரித்துக் கொல்வதும், அதனால் விளைவும் தீமைகளாம். நாற் பூதங்களுள்ளும், சிற்றளவிலிருப்பினும் தீமை செய்வது தீயேயாதலின், தீமைப்பெயர் அதனின்றே தோன்றிற்று.

மரத்தொடு மரமும் கல்லொடு கல்லும் உரசும்போதும் நெரியும் போதும் நெருப்புண்டாவதைக் கண்ட முதற்கால மாந்தர், அவ்வகை யிலேயே நெருப்புண்டாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால், உரசல், நெரிசல், தேய்தல் முதலிய உராய்தற் கருத்துச் சொற்களினின்று, தீயைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியுள்ளன.

உரசு, உராய், உராய்ஞ்சு, உரிஞ், உரிஞு, உரிஞ்சு, உரை, உரைசு, உரைஞ்சு, உரோசு, உரோஞ்சு என்பன ஒருவேர்ப் பிறந்த ஒருபொருட் சொற்கள்.