உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் சொற்றொகுதிகள், திண்மை, பகுப்பு, விருப்பம் ஆகிய மூலக் கருத்துகளுள் ஒவ்வொன்றையே தழுவிய சொற் கூட்டங்களாதலின், சொற்குடும்ப மென்றும் கூறப்பட்டன.

ஒரு குடும்பம் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமுங் சேர்ந்து ஒரு குலமாதலும் போல, ஒரு சொற்குடும்பமும் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமுஞ் சேர்ந்து ஒரு குலமாதலும் உண்டு. எடுத்துக்காட்டாக, தின், திரி, திருகு, திரும்பு, திறம்பு, திமிறு முதலிய சொற்களோடு சேர்க்கப்படின், தில் குடும்பமும் ஒரு குலமாகி விடும். அதன் திறமெல்லாம் ஈண்டு விரிப்பின் பெருகும். எம் ஏனை நூல்களுட் கண்டுகொள்க.

குடும்பு, குடும்பம், குடி, குலம், பால், இனம், வரணம் என மேன்மேல் விரியும் மக்கட் கூட்டப் பகுப்பு, சொற்களுக்கும் ஏற்கும். இப் பகுப்புகளுள் ஒவ்வொன்றும் சிறியது பெரியது என இருதிறப்படும்.

சொற்பெருங் குலம்

மக்கட்டொகுதி, குடும்பம் முதல் வரணம்வரை பல்வகைத் தொகுதி யாகப் பகுக்கப் பெறும்.

கணவனும் மனைவியும் மணமாகாத மக்களுமாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பாகும். பெற்றோரும் மணமாகிப் பிள்ளைபெற்ற மக்களு மாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பமாகும். அம்மீறு பெருமைப் பொருள் விகுதியாதலின், குடும்பிற் பெரியது குடும்ப மென்றும், இவ் விரு பெயர் களும் உலகவழக்கில் தடுமாறி வழங்குகின்றன வென்றும் அறிதல் வேண்டும். அம்மீறு பெருமைப்பொருள் விகுதியாதலை, கண்டு - கண்டம், கம்பு - கம்பம் என்னும் பெயரிணைகளிற் காண்க.

பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குடும்பம் குடியாகும். குடியைக் கோத்திர மென்பர் வடமொழியாளர். தொடர்புள்ள பல குடிகள் சேர்ந்தது குலமாகும். செட்டியார் முதலியார் என்பன குலங்கள். குறவர், மறவர், இடையர், குடியானவர் (உழவர்), செம்படவர் என்பன முதற்காலத்தில் ஐந்திணைக் குடிகளாக விருந்து, பின்பு ஐங்குலங்களாக மாறிவிட்டன.

தனித்தவரும் தொகுதியானவருமாகத் தொழிலொத்த பல குலங்கள் அல்லது குலத்தார் சேர்ந்தது பாலாகும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன தமிழகத்து நாற்பால்கள். அந்தணர் என்பார், அருள் முதிர்ந்த முனிவர். குடியானவர், கவுண்டர், அகம்படியர் முதலிய உழுதுண்ணுங் குலங்களும் முதலியார், வெள்ளாளர் முதலிய உழுவித் துண்ணுங் குலங்களும் சேர்ந்தது வேளாண் பாலாகும். இங்ஙனமே பிறவும்.

பல பால்கள் சேர்ந்தது இனம். தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் முதலியன இனங்கள். இனத்திற்கு மேற்பட்டது வரணம். ஆரியர், திராவிடர், மங்கோலியர் முதலியர் வரணங்கள். வரணம் என்னும்