உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நெடுங்கணக்கு (அரிவரி)

95

இதை யறியாதார் F தமிழில் இல்லையென்றும், ஜ தமிழிலில்லை யென்றும், இன்னோரன்ன எழுத்துகளைப் புதிதாய்ச் சேர்த்தல் வேண்டு மென்றும் ஓலமிட்டுத் திரிவர். உலக முழுமைக்கும் பொதுமொழியாய் வந்து கொண்டிருக்கின்ற இங்கிலீஷில், ஏனைமொழிச் சிறப்பெழுத்துகளைச் சேர்க்கக் காரணமிருப்பினும், எவரேனும் ஞ, ண, ழ, ள முதலிய எழுத்துகளை இங்கிலீஷில் சேர்க்கவேண்டுமென்று கூறின துண்டா? அன்றி, மிக நிறைவுள்ளதாகக் கருதப்படும் வடமொழி யரிவரியை இன்னும் நிறைவாக்க வேண்டி எ, ஒ, ழ, ற என்ற எழுத்துகளைச் சேர்க்க வேண்டு மென்று. எவரேனும் கூறினதுண்டா? இவரெல்லாம் அமைந் திருக்கவும் தமிழர்மட்டும் முனைந்து நிற்பதேன்? இதனானேயே பிறர்க்குத் தாய்மொழிப் பற்றுள தென்றும் தமிழர்க்கில தென்றும் விளங்குகின்றதே!

ஒரு மொழியின் அரிவரி அம் மொழியொலிகட்குமட்டும் அமைந்ததா? பிறமொழியொலிகட்கும் அமைந்ததா? ஒருமொழி யரிவரியால் அம் மொழிச் சொற்களை மட்டும் எழுதாது, பிறமொழிச் சொற்களை எழுதி நகைப்பது பெரும் பேதைமையாகும். ஒரு மொழிக்கு அதிலுள்ள ஒலிகளை யெல்லாம் குறிக்க வரியின்றெனின் அதுவே உண்மையான குறையாகும்.

தமிழில் ஒவ்வோரொலிக்கும் ஒவ்வோர் வரியுண்டு. உலகமொழிக ளெல்லாவற்றின் அரிவரிகளையும் ஒவ்வொன்றாய் உற்றுநோக்கின், தமிழரிவரியே பிறமொழிகள் அழுக்கறுமாறு அத்தனை நிரம்பினதும் வரம்பினதுமா யிருக்கின்றது. உயிரெழுத்துகள் பன்னிரண்டிற்கும் தனித்தனி வரியுள்ளது. குறில் குறிலாகவும் நெடில் நெடிலாகவும் உச்சரிக்கப்படும். மெய்யெழுத்துகள் எல்லா மொழிகட்கும் பொதுவாக இயற்கையான எளிய வொலிகள் பத்தொன்பதே. g ககரத்தின் பேதமும், T சகரத்தின் பேதமுமின்றித் தனியொலிக ளாகா.

இங்கிலீஷில் வரிகளால் 18 (20 Nesfield) உயிர்ஒலிகளைக் குறிப்பிடுகின்றனர். ஓரொலிக்குப் பல வரியும், ஒரு வரிக்குப் பல வொலியு முள்ளன. C.g x (ks) w என்பன மிகை வரிகள். ங(ng), ஷ(sh), த(th), zh என்னும் ஒலிகளைக் குறிக்கத் தனி வரியில்லை, இணைவரி(digraph)களே. அரபி மொழியில் ஏ, ய என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் ஒ, வ என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் உள்ளன.

தமிழில் ஒரு வரி பலவொலிப் பேதங்களைக் குறிப்பினும் அப் பேதங்கள் இடமும் சார்பும்பற்றி இயற்கையாலேயே தோன்றுவதால் வேண்டாத வரிகளைப் பெருக்கி நம்மை வருத்தியிலர் நம் முன்னோர்.

இனி, இசை விளி புலம்பல் ஆதியில், எழுத்துகள் எத்துணையும் நீண்டொலிப்பதைக் குறிக்கத் தமிழில் இருவகை யளபெடைகளுள. பிற மொழிகட் கிவையில்லை. வடமொழியில் உயிரளபெடையே யுண்டு; ஒற்றள பெடை யில்லை.