உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் நெடுங்கணக்கு

113

வரிசையொழுங்கும் பிறப்பியல் முறையும் இல்லாது ஒன்றோடொன்று கலந்திருப்பன. உலகில் முதன்முதல் உயிர்மெய்யோடு கூடியதும்,

எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை

முதலீ றிடைநிலை போலியென் னகமும் கிளவி புணர்ச்சி யெனுமிரு புறமும்”

ஆகப் பன்னிருவகையில் இலக்கணங் கொண்டதுமாகத் தோன்றியது தமிழ் நெடுங்கணக்கே.

இனி, 'அலெக், பேத்' என்றோ, 'அல்பா, பேற்றா' என்றோ, 'ஏ, பீ' என்றோ சொல்லாது, குறிலுக்கு அன்ன என்னுஞ் சாரியையும் நெடிலுக்கு அன்னா என்னுஞ் சாரியையும் கொடுத்து, 'அ அன்ன, ஆ அன்னா' என்று ஒலியியல் முறையிலேயே தமிழர் தம் சிறுவர்க்குத் தொன்றுதொட்டுப் பயிற்றி வந்ததும் சிறப்பாகக் கவனிக்கத்தக்கது.

வடமொழி திரவிட வண்ணமாலைகள்

கிரேக்கத்திற்கும் பழம் பாரசீகத்திற்கும் நெருங்கிய ஒரு மொழியைப் பேசிய வகுப்பார், எழுத்தும் எழுதப்பட்ட இலக்கியமுமின்றி, கன்றுகாலி மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் கி.மு. 2000 ஆண்டுகட்குப் பின் சிறுசிறு கூட்டமாக வடஇந்தியா புகுந்து சிந்துவெளியில் தங்கித் தம் சிறு தெய்வ வழுத்துகளை எழுதாக் கிளவியாகக் கொண்டிருந்து, தமிழரின் தலைமையான நாகரிகத்தைக் கண்டபின், அவர் மதங்களாகிய சிவனியத்தை யும் மாலியத்தையும் தழுவி, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி வடமொழி வண்ணமாலையை அமைத்துத் தமிழிலக்கியத்தைத் தொடர்ந்து மொழி பெயர்க்கவும் தம் மேம்பாட்டை நாட்டுதற் கேற்றவாறு தொன்மங் (புராணங்) களைப் புனையவும் தலைப்பட்டனர்.

பிற்காலத்தில், வடமொழி வண்ணமாலையைப் பின்பற்றிப் பல திரவிட இனத்தாரும் தத்தமக் கேற்றவாறு வண்ணமாலை வகுத்துக் கொண்டனர்.

வடமொழி வண்ணமாலையின் பின்மை

1. வடமொழி காலத்தால் தமிழுக்குப் பல்லாயிரம் ஆண்டு பிந்தியது. தமிழ் திரிந்து திரவிடமாகித் திரவிடம் ஆரியமாக மாறியபின், அதன் ஒரு பகுதி வடஇந்தியப் பிராகிருதத்துடன் கலந்து வேதமொழியாயிற்று. அவ் வேதமொழி தமிழுடன் கலந்து சமற்கிருதந் தோன்றிற்று.

2. கிரேக்கத்தில் Th, Ph, Kh என்ற மூவெழுத்துகளே மூச்சொலியுடன் கூடியவை. சமற்கிருதத்தில் க ச ட த ப ஆகிய ஐந்து வல்லெழுத்துகளும் மூச்சொலியுடனும் எடுப்பொலியுடனும் சேர்த்து, வலிப்பொலி, உரப்பொலி, எடுப்பொலி, கனைப்பொலி என நந்நான்காக வகுக்கப்பட்டுள்ளன.