உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

இலக்கணக் கட்டுரைகள்

குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்"

எனச் சூத்திரம் செய்திரார்.

குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல"

என்னும் அடுத்த சூத்திரத்தினால் மூவகைக் குறைகளும் பெயர்ச்சொற்களே யென்பது பெறப்படும். ஆகையால், குறைச்சொல் என்பது குறைந்த சொற்கட் கெல்லாம் பொதுப்பெயரேயன்றி வினைப்பகுதிக்கே யுரிய சிறப்புக் குறியீடு அன்றென்பது தெரிந்துகொள்க.

உரிச்சொல் லென்பது வினைப்பகுதியே யாயின், வேற்றுமை

மயங்கியலுள்,

"வினையே செய்வது” என்னும் சூத்திரத்தில் 'வினை' என்பதனாலும்,

எச்சவியலுள்,

"செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்

செய்யென் கிளவி யாகிட னுடைத்தே”

(தொல். சொல். 593)

என்னுஞ் சூத்திரத்தானும் வினைப்பகுதியைத் தொல்காப்பியர் குறித் திருத்தலின், அதை மீண்டும் உரியியல் என்றோரியலிற் கூறுவது கூறியது கூறலாமென்க. இனி,

"வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன."

(தொல். சொல். 783)

என்று தொல்காப்பியர் உரிச்சொல்லை வெளிப்படு சொல், வெளிப்படாச் சொல் என இருவகைப்படுத்தி யிருப்பதால், உரிச்சொல் வெளிப்படாச் சொல்லாகவே யிருக்கின்ற செய்யுட் சொல்லன்று எனக் கூறுவர் சிலர்.

உலகத்திற் பல வகுப்பாருக்குள்ளும் பல குழூஉக்குறிகள் வழங்கி வருகின்றன. ஒரு குழுவினைப் பிறர்க்குத் தெரியாவண்ணம் மறை பொருளனவாகத் தமக்குள் வழங்கிக்கொள்ளும் குறிகளே குழூஉக்குறி யாகும். ஆயினும் நாளடைவில் சில குழூஉக் குறிகளின் பொருள்கள் பிறர்க்கு வெளியாகிவிடுகின்றன. அங்ஙனம் பொருள் வெளியான குழூஉக்குறிகள் உண்மையில் குழூஉக்குறி யல்லவேனும் அவை முன்னிருந்த நிலைமைபற்றிக் குழூஉக்குறி யென்றே கூறப்படுகின்றன. கள்ளைக் குறிக்கும் குதிரை யென்னுஞ் சொல்லும், பொன்னைக் குறிக்கும் பறி யென்னுஞ் சொல்லும் எல்லாரானும் பொருளறியப்படினும் இன்னும் குழூஉக்குறியாகவே கூறப்படும். அதுபோலச் செய்யுட் சொற்களான உரிச்சொற்களும் பொருளறியப்பட்ட பின்னும் உரிச்சொல் லெனவேபடும். ஆனால், உலக வழக்கிற்கு வந்தவைமட்டும் உரிச்சொல்லாகா.

சொற்கள் வழக்கு மிகுதிபற்றிப் பொருளறியப்படுவதும், வழக் கின்மைபற்றிப் பொருளறியப்படாமையுமுண்டு. வழக்குக் காலந்தோறும் மாறிக்கொண்டே யிருக்கும்.