உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

காரம், காரன், காரி

வடமொழியை அடிப்படையாகக்கொண்டு தூய தென்சொற்கட்கும் வேர்காணும் வழூஉ வழக்கம், தமிழகம் அகவிருளில் முழுக்கப்பட்டிருந்த இடைக்காலத்தில் தோன்றி, இன்றும் தொடர்கின்றது. இயல்பிலும் போக்கி லும், வடமொழியும் தென்மொழியும் வடக்கும் தெற்கும்போல் நேர் மாறானவை. தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு அடிப்படையு மாதலால், பல வடசொற்குத் தமிழை அடிப்படையாகக் கொண்டு வேர் காணமுடியுமேயன்றி வடமொழியை அடிப்படையாகக் கொண்டு எத் தமிழ்ச்சொற்கும் வேர் காணமுடியாது. இவ் வுண்மையை அறிந்தே, கால்டுவெல் கண்காணியாரும், தமிழ்ச்சொற்கட்கெல்லாம் தமிழ்முறை யிலேயே அமைப்புக் கூறவேண்டு மென்றும், அங்ஙனம் கூற வியலாத போதே வடமொழித் துணையை நாடவேண்டு மென்றும், அங்கும் வட மொழித்துணையை நாடுவதைவிடத் தமிழ்வேர் அடையாளமின்றி மறைந்துவிட்டதென்று கொள்வதே பொருத்த மென்றும் கூறிப்போந்தார்.

மொழியாராய்ச்சி யில்லாதார் வடசொல்லென மயங்கும் தென் சொற்களுள், 'காரன், காரி' ஈறுகளும் அடங்கும். இவை ‘காரம்' என்னும் தென்சொல்லடியாகப் பிறந்த ஆண்பால் பெண்பாற் பெயரீறுகள். செய் என்னும் ஏவற்பொருள்படும் ‘க்ரு' என்னும் வடசொல்லினின்று, 'காரன் காரி' யீறுகள் பிறந்திருப்பதாக, வடமொழியாளரும் அவர் வழியினரும் கொள்வர். இதன் புரைமையை விளக்கிக் காட்டுவல்.

‘காரன் காரி' யீறுகட்கு அடியான காரம் என்னும் தென்சொல், கடு என்னும் அடிவேரினின்று பிறந்ததாகும். கடுத்தல் மிகுதல். மிகுதற் கருத்தினின்று கடுமை, வன்மை, வலி, எரிவு, வெம்மை, விறைப்பு, சினம் முதலிய கருத்துகள் முறையே தோன்றும். உப்புக்கடுத்தல், கடுங்காற்று, வயிற்றுக்கடுப்பு, கடுவெயில், காட்டமாயிருத்தல், முகங்கடுத்தல் முதலிய வழக்குகளை நோக்குக.

கடு என்னும் சொல்லே கடி என்னும் உரிச்சொல்லாகத் திரியும். குற்றுகரமும் முற்றுகரமுமான பல ஈற்றெழுத்துகள் இகரமாகத் திரிதல் இயல்பு. எ-டு: பஞ்சு-பஞ்சி, வடு-வடி (மாம்பிஞ்சு). கடி என்னும் உரிச்சொற்குத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் பொருள்களெல்லாம், கடு என்னுஞ் சொல்லுக்கும் இடுத்தல் அல்லது பொருந்துதல் காண்க.