உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

இலக்கணக் கட்டுரைகள்

அகக்கரண வாற்றலும், அறிவின் அல்லது ஊக்கத்தின் மிகுதியே யன்றி வேறன்று. ஆகவே, இருவகை வலியுள் எதுவாயினும் ஒன்றன் மிகுதியே. அம் மிகுதியினாலேயே அதிகாரம் அல்லது உரிமையுண்டாம். வலிய பகையை எளியவன் வெல்லுதற்குக் காரணமான சூழ்ச்சிவலியும் மதித்திற மிகுதியே.

ஓர் இடத்திற்கு அல்லது பொருட்கு எங்ஙனம் ஒருவன் தன் உடல் வலிமிகுதியால் அதிகாரியாவனோ, அங்ஙனமே ஒரு நூலிற்கும் அல்லது அறிவுச் செய்திகளுக்கும் ஒருவன் தன் அறிவு மிகுதியால் அதிகாரியாவன். இங்ஙனம், மிகுதிக் கருத்தினின்று உரிமைக் கருத்துத் தோன்றி யிருப்பதால், அவ் விரு பொருளையும் முறைப்படி யுணர்த்தும் காரம் என்னும் சொல்லினின்று, ஓர் இடத்திற்கோ பொருட்கோ தொழிற்கோ நிலைமைக்கோ அதிகாரம் அல்லது உரிமை யுணர்த்தும் 'காரன்', 'காரி' இருபாற் பெயரீறுகள் தோன்றியுள்ளன.

அம்பலகாரன், அருமைக்காரன், ஆட்டுக்காரன், ஆப்பக்காரி, ஆனைக்காரன், எண்ணெய்க்காரன், எழுத்துக்காரன், ஓடக்காரன், கட்சிக்காரன், கடன்காரன், கடைகாரன், கப்பற்காரன், கறிகாரன், காட்டுக் காரன், காய்ச்சற்காரன், காரியக்காரன், காவற்காரன், காவடிக்காரன், குச்சுக்காரி, குடிகாரன், குடிசைக்காரன், குடைகாரன், குதிரைக்காரன், குப்பைக்காரன், குழற்காரன், குறிகாரன், குறும்புக்காரன், கூலிக்காரன், கெட்டிக்காரன், கொட்டுக்காரன், கொடுமைக்காரன், கொத்துக்காரன், கொல்லத்துக்காரன், கொல்லைக்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன், கோடரிக்காரன், கோபக்காரன், கோழிக்காரன், சட்டைக்காரன், சண்டைக்காரன், சவாரிக்காரன், சாணைக்காரன், சிரங்குக்காரன், சுண்ணாம்புக்காரன், செய்கைக்காரன், சேலைக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன், தடிகாரன், தண்டற்காரன், தண்ணீர்க்காரன், தயிர்க்காரி, தீட்டுக்காரன், துன்னகாரன், தையற்காரன், தொந்தரவுக்காரன், தொள்ளைக்காரன், தோட்டக்காரன், நாடகக்காரன், நிலத்துக்காரன், நுங்குக்காரன், நோவுக்காரன், பகைக்காரன், பட்டக்காரன், பண்ணைக்காரன், பணக்காரன், பன்றிக்காரன், பாற்காரன், பிள்ளைக்காரி, புள்ளிக்காரன், புளியங்காரன், புன்செய்க்காரன், பூக்காரன், பெரியதனக் காரன், பெருமைக்காரன், பேராசைக்காரன், பொடிக்காரன், பொறாமைக் காரன், மருந்துக்காரன், மாட்டுக்காரன், மீசைக்காரன், முட்டைக்காரன், முறைகாரன், மேளக்காரன், வண்டிக்காரன், வயிற்றுவலிக்காரன், வளையற்காரன், வாத்துக்காரன், வீட்டுக்காரன், வீணைக்காரன், வெள்ளைக் காரன், வேட்டைக்காரன், வேலைக்காரன், வேளைக்காரன் முதலிய நூற்றுக்கணக்கான பழம் பெயர்களும், இனிமேற் புதிது புதிதாகத் தோன்றும் இத்தகைய பிற பெயர்களும், ஒன்றற்குரிமை பூண்டவரை யுணர்த்துவனவே யன்றி, ஒன்றைச் செய்பவரை யுணர்த்துவன வாகா.