உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

ஒலியழுத்தம்

ஏதேனும் ஒரு காரணம்பற்றி, சொற்களின் அசைகள் அல்லது எழுத்தொலிகள் எடுத்தல், படுத்தல், நலிதல் என்னும் மூவேறு வகையாய் ஒலிப்பது, எல்லா மொழிகட்கும் பொதுவாம். எடுத்தல் என்பது, ஒலிப்பு அல்லது பலுக்க (உச்சரிப்பு) முயற்சி வன்மையாய் அழுந்துதல்; படுத்தல் என்பது, அது மென்மையாய் அழுந்துதல்; நலிதல் என்பது, அது அவ் விரண்டிற்கும் இடைத்தரமாய் அழுந்துதல், இவற்றை, முறையே, Acute, Grave, Circumflex என்பர் ஆங்கிலேயர்; உதாத்தம், அனுதாத்தம், சுவரிதம் (ஸ்வரிதம்) என்பர் வடநூலார்.

ஒலியழுத்தம் வேறுபடுங் காரணங்கள், இயல்பு அல்லது வழக்கம் (Usage), அளவு (Quantity), ஒலி வடிவு, (Quality ofsound), ஓசை (Rhythm), அலகுமட்டம் (Musical pitch), வன்புறை (Emphasis), பொருள் வேறுபாடு, சொற்பிரிப்பு (Open Transition or Juncture) எனப் பல திறத்தன. இவற்றுள் ஓசை செய்யுட்குரியது; அலகுமட்டம் பெரும்பாலும் இசைக் குரியது; ஏனையவெல்லாம் உரைநடைக்கும் செய்யுட்கும் பொதுவாகும்.

இயற்றமிழ் உரைநடையில் இயல்பு, பொருள் வேறுபாடு, சொற் பிரிப்பு என்னும் மூவகையில் ஒலியழுத்தம் நிகழும். இவற்றுள், இயல்பு தமிழ் இலக்கண நூல்களிற் கூறப்பட்டில. ஆயினும், மேலையிலக்கணத் துணைக்கொண்டு இலக்கியங் கண்டதற் கிலக்கணங் காணும் முறையில் அதனை அறிந்துகொள்ள முடியும். வன்புறையைப் பொதுவாக ஒலியழுத் தத்திற் சேர்ப்பதில்லை.

இயல்பு

இயல்பு என்பது இயல்பாக அல்லது வழக்கமாக ஒலிக்கும் முறை. பொதுவாக, எவ் வினையிலும் தொடக்கத்தில் முயற்சி மிக்கிருப்பது, அனைவரும் அறிந்ததொன்று. ஒலிப்பு முறையிலும், சொற்களின் முதலசையில் அல்லது முதல் எழுத்தில் முயற்சி மிக்கழுந்துகின்றது. இவ் வுண்மையை எச்சொல்லையும் ஒலித்துக் காண்க. ‘அழகன்”, “வந்தான்’ முதலிய தனிச் சொற்களில் மட்டுமன்றி, 'செந்தமிழ்', 'மறைமலையடிகள்’, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்', ‘ஆசிரியர் என்ன