உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

பண்பாட்டுக் கட்டுரைகள்

பிறவிப் பெருங்குலங்களாக மாற்றப்பட்டன. அதன்பின், அந் நாற்பெருங் குலங்களும் நூற்றுக்கணக்கான சிறு குலங்களாகப் பிரிக்கப்பட்டும் பெருக்கப்பட்டும் போயின. தமிழரின் ஒற்றுமையையும் வலிமையையும் குறைப்பதற்குப் பிறவிக்குலப் பிரிவினையே தலைசிறந்த வழியாதலின் குலவொழுக்கக் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் வரவரக் கண்டிப் பாக்கப்பட்டு வந்தன.

பெயர், உடை, உணவு, அணி, குடியிருப்பு, தொழில், பழக்கவழக்கம், சடங்கு, தெய்வம், பேச்சு, இடுகாடு அல்லது சுடுகாடு முதலிய எல்லா வகைகளிலும் குலங்கள் வேறுபடுத்தப்பட்டன.

பெயரளவில் வேறுபாட்டைத் தெளிவாக்குவதற்கு, குலங்குறித்த சொற்களும் ஈற்றிற் பட்டப் பெயராகச் சேர்க்கப்பட்டன. அவை பெரும் பாலும் குலத்தலைவன் அல்லது தொழிற்றலைவன் அல்லது ஊர்த்தலைவன் பட்டப் பெயராகவே இருந்துவருகின்றன.

தேவன் என்பது குலத்தலைவன் பட்டம்; முதலியார் என்பது தொழிற்றலைவன் பட்டம் ; நாடார் என்பது ஊர்த்தலைவன் பட்டம்.

நாடன் - நாடான் - நாடார். நாடன் - நாட்டான் - நாட்டார். ரகர மெய்யீற்றுச் சொற்கள் உயர்வுப் பன்மை குறிப்பன.

படைமுதலியார் அல்லது சேனைமுதலியார் என்பதன் குறுக்கமே முதலியார் என்பது. அரிய நாயக முதலியார் விசயநகரப் படைத்தலைவருள் ஒருவர். அவர் பதவிப் பெயர்க்குறுக்கம், முதற்கண் அவர் மக்கட்கும், பின்னர் உறவினர்க்கும், அதன்பின் அவர் குலத்தாராகக் கருதப்படும் அனைவர்க்கும் பட்டப்பெயராக வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஏனையவும். இவ் வழக்கம் மேனாடுகளில், அரசர் மக்கட்கும் பெருமக்கள் மக்கட்கும் வழங்கிவரும் மதிப்புறவுப் பட்டம் (Courtesy Title) போன்றதே. ஆயின், அங்குத் தந்தை பட்டத்தினும் தாழ்ந்ததே. அடைமொழியாகவோ கடைமொழியாகவோ மக்கட்கு மட்டும் வழங்கி வரும், இங்கோ, தந்தையின் பட்டமே மக்கட்கு மட்டுமன்றி, உறவினர்க்கும், குலத்தாரென்று கருதப்படும் அனைவருக்கும் இறுதிச் சிறப்புப் பெயராக வழங்கிவருகின்றது.

முதலியார் என்பது போன்றவே நாயர், நாயுடு என்பனவும்.

தண்டநாயன் = (கேரள நாட்டுப்) படைத்தலைவன். நாயன் என்பதன் உயர்வுப் பன்மை நாயர். தண்ட நாயர் - நாயர் (குறுக்கம்)

நாயன் - நாயகன் - நாயக்கன் - நாய்க்கன். திருமலை நாயக்கன், போடி நாயக்கன், பெத்த நாயக்கன் என்பன தெலுங்கப் படைத்தலைவர் பெயர். தண்ட நாயக்கன் - நாயக்கன் (குறுக்கம்) நாயக்கர், நாய்க்கர் என்பன உயர்வுப் பன்மை.

விசயநகரப் பேரரசின் படைத் தலைவராகவும் படிநிகராளியராகவு மிருந்த சிலர், பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசராயினர்.