உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

பண்பாட்டுக் கட்டுரைகள்

கடைக்கழகக் காலத்தில், தமிழரின் இயற்பெயரோடு குலப்பட்டப் பெயர் இன்றுபோல் இணைந்து வழங்கியதில்லை. ஆரியச் சார்பான பிறவிக் குலப்பிரிவினை அக்காலத்தே நாற்பாலளவில் வேரூன்றியிருந்ததேனும், மூவேந்தராட்சியும் முடிந்த 16ஆம் நூற்றாண்டின் பின்னரே, சிறுகுலப் பட்டப்பெயர்களெல்லாம் சிறந்தெழுந்ததாகத் தோன்றுகின்றது.

அப் பட்டப்பெயர்கள் எல்லாப் பிறவிக் குலத்தார்க்கும் நிலைத்து நின்றவையல்ல. அவரவர் அல்லது அவ்வக் குலத்தார் ஆற்றலுக்கும் முன்னேற்றத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, மாறியும் வந்துள்ளன. இதைக் “கள்ளன் மறவன் கனத்தா லகம்படியன், மெள்ள மெள்ள வந்துபின் வெள்ளாள னானானே" என்னும் பழமொழியும் உணர்த்தும்.

முதலியார் என்னும் பட்டம், விசயநகரப் பேரரசின் படைத் தலைவரான அரியநாயகம் போன்ற வெள்ளாளரின் வழியினர்க்கு, முதற்கண் சிறப்பாக வழங்கிற்று. அதன்பின், சோழர் காலத்திற் செங்குந்தப் படை தாங்கிப் பொருத நிலைப்படை மறவரின் வழியினரான நெசவுத் தொழிலாளர்க்கு, ஒருபுடை யொப்புமைபற்றி அப் பட்டம் வழங்கிற்று. அதன்பின்னர் அகம்படியருள் ஒரு சாரார் அப் பட்டத்தைத் தாமாகத் தமக்கு இட்டுக்கொண்டனர். இன்றோ, முதலிப் பெண்ணை மணந்தவரும், நெசவுத்தொழில் செய்வாருள் ஒரு சாராரும், தமக்கு முதலியார்ப் பட்டம் சூட்டிக்கொள்கின்றனர். இனி, ஒருசிலர் தம் விருப்பம் ஒன்றே கரணியமாகத் தம் பெயருக்குப்பின் முதலியார்ப் பட்டத்தை இணைத்துக் கொள்கின்றனர். இங்ஙனம், வெள்ளாண் முதலியார், செங்குந்த முதலியார், அகம்படிய முதலியார், முதலிப்பெண் கொண்ட முதலியார், நெசவுத்தொழில் முதலியார், தான்றோன்றி முதலியார் என அறுவகை முதலியார் உளர்.

இத்தகைய வகையீடு ஏனைச் சில குலங்கட்கும் ஒக்கும்.

பிள்ளைப் பட்டமோ, இன்று பிராமணர் தவிரப் பிற குலத்தார்க் கெல்லாம் பொதுவாய்விட்டது. ஆயினும், அது அவ்வக் குலத்திற்கேற்ப வெவ்வேறு அளவு மதிப்புள்ளதாயுள்ளது.

இனி,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே'

(மரபு, 83)

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப, சோழர்க்குப் போர்க்காலத்திற் பொருநராக வந்ததனாற் படையாட்சியென்று பட்டந்தாங்கும், ஒரு சார் உழுதூண் வேளாளரான தமிழருள் ஒருசிலர், தெலுங்கர்க்கேயுரிய இரெட்டியார் என்னும் பட்டப் பெயரைத் தமக்கு வழங்கி வருவது, ஒரு வேடிக்கையான செய்தியே.

இங்ஙனம், உண்மைக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தாத குலப்பட்டப் பெயர்களை, இந்தியரையெல்லாம் குலப்பிரிவற்ற ஒரே குமுகாயமாக்க