உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(13) கல்வி (Culture)

மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந்தொகைய ராய்க் குறிஞ்சிநிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட்டொகை மிக மிக, இயற்கை விளைவு போதாதாயிற்று. விதைகள் தாவர வர்க்கத்தினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி ஊகித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடர்ந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.

பன்றியுழுதவிடத்துப் பயிர்விளைப்பதை,

66

அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்

கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட் கேழ லுழுத பூழி

நன்னாள் வருபத நோக்கிக் குறவ

ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை”

என்பதாற் காண்க.

(புறம். 168)

ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன் முதற் குறித்தது. கல், பகுதி; வி, விகுதி. கல்லல் தோண்டல். கல்லென்னுஞ் சொல்லே இல்லென்று திரியும். பயிர்த்தொழில் வினைகள் பலவற்றுள்ளும் உழவே முதலதும் முதன்மையது மாதலின், அவ் வுழவென் பெயரே ஒருவகை ஆகுபெயராய்ப் பயிர்த்தொழில் முழுமைக்குமாயிற்று. அன்றியும் வானாவாரிப் பயிர்கட்கு உழவொன்றே யமையும். உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும், ஏருமெருதுங்கொண்டுழ வறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று. அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மை யின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.