உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாகரிகம்

101

பரிமேலழகர் திருக்குறளுரைப்பாயிரத்தில் ஒழுக்கத்தைப்பற்றி, "ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்" என்று கூறியுள்ளார். இது குலந்தோறும் வேறாகி நடுவுநிலை திறம்பிய ஆரியவழி யொழுக்கமாதலின், எல்லார்க்கும் ம் பொதுவானதும் நடுவுநிலை திறம்பாததுமான தமிழொழுக்கத்திற்குச் சிறிதும் வேண்டப்படாது. இதை அவ் வுரையாசிரியரே மீண்டும்,

"அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபா டுடைமையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புக ளொழித்து எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி, இல்லறந் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது" என்று நூலாசிரியர் கருத்திற்கேற்பக் குறித்துள்ளார். ஆதலால், ஒழுக்கமென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கருமத் தூய்மையேயன்றிக் குலந்தோறும் வேறுபட்ட வருணாசிரம தருமமன்று.

நாகரிகமென்னும் சொல்லைத் திருவள்ளுவர் 'கண்ணோட்டம்' என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்”

(குறள். 50)

என்னும் குறளுரையில், நாகரிகத்திற்குக் கண்ணோட்டமென்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதே பொருளில் கம்பரும்,

66

'நாக்கரியும் தயமுகனார் நாகரிக ரல்லாமை

என ஆண்டிருக்கின்றனர்.

கண்ணோட்டம் தூய நினைவுகளில் அல்லது திருந்திய குணங்களில் ஒன்றாதலின் நாகரிக மெனப்பட்ட தென்க.

நாகரிகமென்னும் சொல் 'நகர் அகம்' என்னும் சொற்றொடரின் (அல்லது பகுபதத்தின்) திரிபாகும். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகமென்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம்.

மக்கட் பெருக்கால் சிற்றூர்கள் பேரூர்களாவதும், பேரூர்கள் நகரங்களாவதும் இயல்பு. சிற்றூர் சிறிது சிறிதாய் நகர்ந்து பேரூரானபின் நகரெனப்படும். நகர் என்பது முதனிலைத் தொழிலாகுபெயர்; நகரம் என்பது அம்சாரியை பெற்ற முதனிலைத் தொழிலாகு பெயராகவும், அம் விகுதிபெற்ற தொழிலாகு பெயராகவுங் கருதப்படும். நகர்தலாவது பெயர்தல் அல்லது தள்ளுதல். மக்கள் நெருக்கம்பற்றி ஒரு மனையிலுள்ளார் நகர்ந்து புதுமனை புகுவதும் ஒரு தெருவிலுள்ளார் நகர்ந்து புதுத்தெரு புகுவதும் கண்கூடாகக் காண்கின்றோம். இங்ஙனமே ஓர் ஊரானது சிறிது சிறிதாய் நகர்ந்து நாளடையில் நகராகின்றது.