உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

பண்பாட்டுக் கட்டுரைகள்

பண்டைத் தமிழின்படி ஊர், நகரம் என்பன ஒருபொருட் சொற்கள். ஊர் என்னும் பெயர்க்கும் இதுவே காரணம். ஊர்தலும் நகர்தலும் (ஏறத்தாழ) விரைவளவில், ஒன்றே. முற்காலத்தில் மருதநிலத்தூர்களே ஊர்களெனப் பட்டன. குறிஞ்சி, முல்லை, பாலை நிலங்களிலுள்ள குறிச்சி, பாடி, பறந்தலைகளைவிட மருதநிலத்தூர்கள் மிகப் பெரியனவா யிருந்தன. வாணிகம்பற்றி நெய்தல்நிலத்துப் பட்டினங்களும், உழவுபற்றி மருத நிலத்தூர்களும் மிகச் சிறந்தனவும் பெரியனவுமான நகரங்களாயின. அவ் விருவகை நகரங்களிலும் வாணிகம்பற்றியும் உழவுபற்றியும் பலவகைக் கைத்தொழில்களும் சிறந்திருந்தன. பட்டினங்களையும் ஊர்களையுமே பண்டை மன்னரும் தத்தம் தலைநகராகக் கொண்டிருந்தார்கள். காவிரிப் பூம்பட்டினமும் கொற்கையும் நெய்தனிலத் தலைநகர்களாகவும், உறையூரும் மதுரையும் மருதநிலத் தலைநகர்களாகவும் இருந்தமை காண்க.

உழவு, வாணிகம் என்னும் இரண்டினுள் உழவே தலைமை யானதாயும், உயிர்வாழ்க்கைக்கு தாயும் வாணிகத்திற்குக் காரணமாயு மிருத்தலின், முதலாவது ஏற்பட்ட தொழில் உழவேயென்றும் முதலாவது நகராகியது மருதநிலத்தூரே என்றும் தெரிந்துகொள்க. பலநிலத்து மக்களும் தொழில்பற்றியும், பாதுகாப்புப்பற்றியும், செயப்படுபொருள் (manufacture)களா லேற்பட்ட வசதிபற்றியும், வாணிகம்பற்றியும் ஊரை யும் பட்டினத்தையும் அடுத்ததினால் அவை விரைந்து நகரும் மாநகரு மாயின. ஊர் என்னும் பெயர் இக்காலத்தில் பலவகை யூர்களுக்கும் பொதுப் பெயராகவும், சிற்றூர் என்னும் பொருளில் சிறப்புப் பெயராகவும் வழங்கு கின்றது; நகரென்னும் பொருளில் வழங்குகின்றிலது.

ம்

பட்டிகளிலும் சிற்றூர்களிலுமிருந்த மக்களைவிடப் பட்டினங் களிலும் நகர்களிலுமிருந்த மக்களே நாகரிகமாயிருந்தனர். இக்காலத்திலும் பெரும்பான்மை அதுவே. மக்கட்பெருக்கால் நகரங்களில் வழக்குத் தீர்ப்பிற்கும் பொருட்காவலுக்கும் ஊராண்மை நாட்டாண்மை முதலிய அரசியல்களும், அவற்றின் சட்டங்களும், அவற்றை மீறியவழித் தண்டங் களும் ஏற்பட்டன. தண்டனைகட் கஞ்சி மக்கள் திருந்திய ஒழுக்கமுடை யராயினர். பலவகைக் கைத்தொழிலால் பலவகைப் பொருள்களும் செய்யப்பட்டதினால் வசதியாகவும் சிறப்பாகவும் வாழத்தொடங்கினர். சிறந்த பாத்திரங்களிற் சமைத்துண்ணவும், வசதியான வீடுகளில் வசிக்கவும், நெய்தவுடைகளை உடுக்கவும் தலைப்பட்டனர். நடையுடை பாவனைகள் நாளடைவில் திருந்திவரலாயின. இங்ஙனமே நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாய் வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. 'நகரகம்' என்னும் சொல் 'நகரிகம்', 'நாகரிகம்' என மருவி வரும்.

சிற்றூர்களிலும் பட்டிகளிலு மிருந்த மக்கள் நாகரிகமின்றி மிலேச்ச ராயும் முரடராயு மிருந்துவந்தனர். இக்காலத்திலும், நாகரிகமில்லாதவனைப் ‘பட்டிக்காட்டான்' என்பது வழக்கம்.