உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாகரிகம்

மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதையுள், 'சாதுவ னென்போன் தகவில னாகி

வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையிற் றானுஞ் செல்வுழி நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ

நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்

ஓங்குயர் பிறங்க லொருமர நீழல் துஞ்சுதுயில் கொள்ளச் சூர்மலை வாழு நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தன னளியன்

ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்

கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய விருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்தது போலப் பெண்டுட னிருந்த பெற்றி நோக்கி”

105

(LO - 69)

என்னும் அடிகளால் நாகரில் ஒரு வகுப்பார் அம்மணரா யிருந்தா ரென்றும் மக்களைக் கொன்று தின்றாரென்றும் அறியக் கிடக்கின்றது. ஆதலால் நாகரிகம் என்னும் சொல் நாகர் என்பதினின்றும் வந்ததன்று என்றும் நாகரென்பார் கீழ்த்திசை நாடுகள் பலவற்றிலுமுள்ள மக்கட்கூட்டத்தாரே என்றும், அவருட் சிலர் நாகரிகராயும் சிலர் அநாகரிகராயு மிருந்தன ரென்றும் அறிந்துகொள்க.

- "செந்தமிழ்ச் செல்வி" கடகம் 1932