உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வெடிமருந்து

107

எளிதாய் உணரக்கூடும். கந்தகம் பிந்திச் சேர்க்கப்பட்டதே, அது வெடிப் பிற்கு வேண்டுவதன்று. நமது தற்காலத் துப்பாக்கி மருந்து அத்தகைய கலவையின் திருத்தமும் நிறைவுமேயன்றி வேறன்று" (மொழி பெயர்ப்பு)

கருமருந்தானது தென்னாட்டில் வாணவேடிக்கைக்கும் கிணறு வெட்டுக்குமாக இருவகையிற் பயன்பட்டுவருகிறது. வாணம் சிறியோர்க் குரியவும் பெரியோர்க் குரியவுமாக இருவகைப்படும். அவற்றுட் சிறியோர்க்குரியன வேட்டுகளென்றும் பட்டாசு (பட்டென்று வெடிப்பது) என்றும், டப்பாசு (டப்பென்று வெடிப்பது) என்றும் பலவிடத்துப் பலவித மாய்ப் பொதுப்பெயர் கொள்ளும். இக்காலச் சிறார் வேட்டுகளெல்லாம் தீபாவளி முதலிய திருவிழாக் காலங்களில் ஜப்பான் நாட்டினின்றும் வரவழைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஜப்பான் வெடிகள் வருமுன்னர் நம்நாட்டுச் சிறார் தாமே வெடிகள் செய்து வந்தனர். இக்காலத்தும் சில சிறார் வெடியுப்பும் மனோசிலையும் தனித்தனி அரைத்துச் சீனிக்கற்களுடன் சேர்த்துக் கல்வெடி செய்வதையும் கரித்தூளும் நெல்லுமியுஞ் சேர்த்துப் பொரிவாணஞ் செய்வதையும் கண்கூடாகக் காண்கின்றோம். இங்ஙனஞ் செய்தற்கியலாத இளஞ்சிறாருங்கூடப் பொரிவாணஞ் சுற்றும் பாவனையாய், இருகைகளையும் நீட்டிக் 'கிறுகிறு வாணம் கின்னறு வாணம்' என்று சொல்லிக்கொண்டு சுற்றி விளையாடுவதை இளமைமுதற் கண்டிருக்கின் றாம். சிறியோர் செய்வனவும் விளையாடுவனவுமெல்லாம் பெரும்பாலும் பெரியோர் செய்பவற்றைப் பின்பற்றியேயாம். (சிற்றில், சிறுதேர், மணற்சோறு, மண்ணாங்கட்டிக் கலியாணம் முதலியனவுமதற் குதாரணம்).

இனிப் பெரியோர்க்குரியன பொதுவாய் வாணங்களெனப்படும் அவை கம்பவாணம், கட்டுவாணம் (வாணக்கட்டு), ஈச்சவாணம், பொரிவாணம், காவடிவாணம், குதிரைவாணம், சேவல்வாணம், அவுட் (ஆங்கிலப்பெயர்) எனப் பலவகைப்படும். இவற்றை யெல்லாம் தென்னாட் டிற் றிருவிழாக் காலங்களில் சிறக்கக் காணலாம். இவற்றுட் பெரும்பாலன வடபாகங்களி லில்லை. (இக் கட்டுரை முழுதும் வடநாடு தென்னாடெனச் சுட்டுவதெல்லாம் சென்னை மாகாணத்தின் வடபாகத்தையும் தென்பாகத் தையு மென்றே தெரிந்துகொள்க.)

வாணமென்னுஞ் சொல் வடமொழியிற் பாணமெனத் திரியும். சில வகரமுதற் றமிழ்ச்சொற்கள் வடமொழியிலும் அதன் தன்மை அமைந்த பிறமொழிகளிலும் பகரமுதற் சொற்களாகத் திரிதலியல்பு. வாத்தைப் பாத்தென்றும், வாடகையைப் பாடகை யென்றும், வண்டியைப் பண்டி யென்றும் கூறுவர் தெலுங்கர். தெலுங்கு ஒரு கொடுந்தமிழ் மொழியேனும் இலக்கண விலக்கியச் சார்பினால் வடமொழித் தன்மை சான்றது. வாணமென்பதற்கு அம்பென்பது பொருள். வாளியென்பது வாளம், வாணம் எனத் திரிந்தது. அதற்கு வளைந்தது, ஒளியுள்ளது, வாலுள்ளது என்பன பொருளாம். இவற்றுள் முன்னதற்கு வள் பகுதி; இடையதற்கு வாள் பகுதி;