உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

பண்பாட்டுக் கட்டுரைகள்

குமரிநாட்டின் தொன்முது பழைமையை நோக்குவார்க்குக் கழகக்கால நெடுமையைப் பற்றிய ஐயுறவும் மயக்கமும் அறவே அறுமென்பது திண்ணம்.

புறநானூற்றில் ஒரு சில (2, 358, 362, 366) செய்யுள்களைத் தவிர, பிறவற்றையெல்லாம் பாடினாரும் அவராற் பாடப்பட்டாரும் கடைக்கழகக் காலத்தினராதலின், புறநானூற்றின் காலம் கடைக்கழகக் காலமாகும் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு).

3. நூல்வகை

தலைக் கழகத்தாரும் இடைக் கழகத்தாரும் இயற்றின நூற்றுக் கணக்கான பல துறைத் தனித்தமிழ் நூல்களெல்லாம் இறந்துபட்டன. இதுபோது கழக நூல்களென்று குறிக்கப்படுபவை கடைக்கழக நூல்களே. அவற்றுள்ளும், இலக்கண நூல்கள் கதை நூல்கள் கலை நூல்கள் முதலியன சேர்க்கப்படவில்லை. பதினெண் மேற்கணக்கென்றும் பதினெண் கீழ்க்கணக் கென்றும் இருபாற்பட்டுக் கடைக்கழக நூல்களென்று வழங்கும் முப்பத் தாறும், பெரும்பாலும், காதல் வாழ்க்கை, மறம், போர், அரச வாழ்த்து, நல் லொழுக்கம், வரலாற்றுத் துணுக்கு ஆகிய ஆறுபொருள் பற்றியவே. மேற் கணக்கில், எட்டு நூல்களே தொகை நூல்களெனப் பிரித்துக் கூறப்படினும், உண்மையில் எல்லாம் தொகை நூலே. எட்டுத்தொகை போன்றே பத்துப் பாட்டும் பல புலவராற் பாடப்பட்டதாகும். பத்துப்பாட்டிலுள்ள பாட்டுக ளெல்லாம் மிக நீண்டிருத்தலாலேயே வேறாகத் தொகுக்கப்பட்டன. “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே" என்று தொல்காப்பியங் கூறு வதால், நூற்றுக்கணக்கான அடிகள் கொண்டு மிக நீண்டிருந்த தனிச் செய்யுளை (பெரும்பாலும் அகவலைப் பாட்டென்று சிறப்பாக முன்னோர் வழங்கியதாகத் தெரிகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கி னுள்ளும், நாலடியார் தொகைநூலாம்; ஏனையவை தனி நூல்கள். கடைக் கழகத்தார் பாடிய பாட்டுகளிலும் நூல்களிலும் பலவற்றைத் தொகுத்தபோது, பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பதினெட்டுக் கொப்பாகக் கீழ்க்கணக்கையும் பதினெட் டாகத் தொகுத்திருக்கின்றனர். இத் தொகை இருபுறவொப்புப் (Symmetry) பற்றியது.

அஃதெங்ஙன மிருப்பினும், புறநானூறு ஒரு தொகைநூல் அல்லது தனிப்பாடற்றிரட்டே. புறப்பொருளைப் பற்றிய நானூறு செய்யுள்களைக் கொண்டது புறநானூறு. இன்னா நாற்பது இனியவை நாற்பது முதலிய நாற்பது பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, நாலடி நானூறு, பழமொழி நானூறு முதலிய நானூறு பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நாலாயிரக்கோவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் (தெய்வப்பனுவல்) முதலிய நாலாயிரம் பாக்களைக்