உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை

113

வேண்டும். ஆராய்ந்து பார்ப்பின், நாள் முதல் ஊழி வரையுள்ள எல்லாக் கால அளவுகளும் ஒவ்வோர் வகையில் ஒவ்வோரழிவில் முடிவனவே யாகும். இன்பத்தைவிடத் துன்பமே கவனிப்பிற் கிடமாதலால், அது காலத்தை அளப்பதற்கோர் எல்லை யாயிற்று.

முதலாவது நாளை யெடுத்துக்கொள்ளின், அஃது உயிர்களின் உணர்ச்சியும் முயற்சியும் அழிந்த இரவில் முடிவதாகும்.

இரண்டாவது வாரம். ஒரு வாரத்தின் கடை நாள் சனி. சனி என்னுங் கோள் துன்பத்திற் கேதுவானதென்றும், சனிக்கிழமை மங்கலவினை செய்யலாகாதென்றும் நம் நாட்டுச் சோதிடமென்னும் வான்நூலும் ஜோசிய மென்னும் வான்குறி நூலும் கூறாநிற்கும். ஒரு சனியில் முடியும் ஏழு நாள்ளவு ஒரு வாரமாகும்.

மூன்றாவது மாதம், மாதந்தோறும் ஓர் அமாவாசை நிகழ்கின்றது. அன்று சந்திரன் மறைந்து உலகெங்கும் இருள் கவிகிறது; கடல் கொந்தளிக் கிறது; நோயாளிகளின் நிலை மிகக் கேடாகிறது. மதி தோன்றாமையாலுள்ள துன்பத்தைப் போக்குவதாக இந்துக்கள் எண்ணெய் முழுக்காடுகின்றனர். சிலர் ஊணுழைப்பும் ஒழிகின்றனர், அல்லது குறை கின்றனர். ஆகவே, அமாவாசை ஒரு துன்ப நாளாக எண்ணப்படுகின்றது. ஓர் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி அடுத்த அமாவாசையில் முடிவது ஒரு மாதமாகும்.

நாலாவது ஆண்டு. ஓர் ஆண்டில், மார்கழி மாதம் ஓர் துன்பகாலமாக எண்ணப்படுகின்றது. ஆடவர் பஜனை முதலிய பக்தி முயற்சிகளாலும், பெண்டிர் இல்லங்களைத் துப்புரவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதாலும் அம்மாதத்தில் தங்கட்கு நேர்வதாகக் கருதும் துன்பங்களைப் போக்க முயல்கின்றனர். அம் மாதத்தின் கடைநாள் 'போகிப் பண்டிகை' என்னும் பேரால் ஓர் சுத்திகரிப்பு (துப்புரவாக்கல்) நாளாகக் கொண்டாடப் படுகிறது. அன்று சுகாதாரக் கேடான பழம்பொருள்கள் சுட்டெரிக்கப் படுகின்றன. அது துன்பந் தொலைவதற்கோர் அறிகுறியெனவும் கருதப் படுகின்றது.

மார்கழிக்கடுத்த தைமாதம் மங்கல மாதமாக மதிக்கப்படுகின்றது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பர். தை முதல் துன்ப மாதமாகிய மார்கழி யீறான காலப்பகுதி ஓர் ஆண்டாகும்.

ஐந்தாவது அறுபதாண்டுச் சக்கரம். முன் காலத்தில் சில பஞ்சங்கள் அறுபதாண்டுக் கொருமுறையாக அடுத்தடுத்து நிகழ்ந்ததால், அத்தகைய பஞ்சமொன்று அறுபதாண்டுக் கொருமுறை நிகழுமென்றெண்ணி அதற்கு அறுபதாம் ஆண்டுப் பஞ்சமென்று பெயரிட்டனர். இக்காலத்தும் அது(60ஆம் ஆண்டாகிய) தாதுவருடப் பஞ்சமென்றழைக்கப்படுகிறது. அறுபதாண்டென்னும் கால அளவு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வந்ததாகும். அவ் வாண்டுகளின் பெயர்களே சாலிவாகனனால் கி.பி. 78-ல்

ம்