உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




501ஆம் குறள் விளக்கம்

43

பற்றிய நால்வகைத் தேர்திறத்தால், மனப்பான்மை ஆராய்ந்து தெளியப் படுவான்.

அரசனுக்கு ஆட்சித் துணைவனாக அமரும் அமைச்சன், குடிக ளிடத்து அன்பாகவும் அரசனிடத்து நம்பகமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருப்பதால், அறவோனாகவும் பொருளாசையில்லாதவனாகவும் கற்பொழுக்கமுடையவனாகவும் சாவிற்கஞ்சாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. அன்றிக் கன்னெஞ்சனாயிருப்பின், குடிகட்கு நன்மை செய்ய முடியாது; பொருள் வெறியனாயிருப்பின், பொதுப் பொருளையும் அரசன் பொருளையும் கையாட நேரும்; பெண்ணின்பப் பித்தனாயிருப்பின், குடிகளின் பெண்டிரைக் கற்பழிக்கவும் அரசனின் உரிமை மகளிரொடு தொடுப்புக் கொள்ளவுங் கூடும்; சாவிற்கஞ்சியா யிருப்பின், அரசனைக் கைவிடவுங் காட்டிக் கொடுக்கவும் மனந்திரியும்.

உரிமை மகளிர் என்பார் தேவியரும் தோழியரும் என இரு சாரார். தேவியர் பெரும்பாலும் அரண்மனையை விட்டு நீங்கார். அவருட் பட்டத்துத் தேவியென்னும் கோப்பெருந்தேவி மட்டும், ஓலக்க விருக்கை யிலும் உலாவருகையிலும் இயற்கை வளங் காணலிலும் உடனிருப்பதுண்டு. வானிலை நன்றாயிருக்கும் நாள்தோறும் சாயுங்காலம் பூஞ்சோலையிலும் பொறிப்படைக் குளத்திலும் அரசனுடன் விளையாடும் இளமங்கையரே தோழிமார் எனப்படுவார். அவர் உயர்நிலைப் பணிப் பெண்களாவார்; பொறிப்படைக் குளம் இலவந்திகை யெனப்படும்.

"தேரிற் றுகளைத் திருந்திழையார் பூங்குழலின்

வேரிப் புனனனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப் புக்கிருந்தா லன்ன பொழில்"

"நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்

ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநற்

பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து

தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து"

என்னும் பாட்டுகளை நோக்குக.

(நள. 22)

(நள. 25)

இனி, அரசனது காமநுகர்ச்சிக் கென்றே, அவன் பெற்றோரால் இளமையிலேயே ஒதுக்கப்பெற்ற மகளிரும் பண்டிருந்தனர். இதை,

"குரவர்கள் இவனறியாமையே இவனுரிமை இதுவெனவும், இவன் யானையுங் குதிரையும் இவையெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்து வைத்துத் தாம் வழங்கித் துய்ப்ப வென்பது. அவ்வகையே குரவர்களான் இவனுரிமையென்றே வளர்க்கப்பட்டாராகலான் தலைமகளை எய்துவதன் முன் உளரென்பது" என்னும் இறையனாரகப் பொருளுரையால் (40ஆம் நூற்பாவுரை) அறிந்துகொள்க.