உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7 பாவினம்

வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள இயைபுபற்றிய திரிபுணர்ச்சி களுள், பிற்காலத் தமிழ்நூல்களிற் பெருவழக்கான பாவினங்கள் வடமொழி யாப்புவழிப்பட்டன வென்பது மொன்றாம். அஃது எத்துணை உண்மை யென ஈண்டாராய்வாம்:

துறை தாழிசை விருத்தமென்னும் மூவகைப் பாவினங்களுள் விருத்த மொன்றே வடமொழிப் பெயரால் வழங்குவதாகும். அஃதூஉம் பெயரான் மட்டும் வடமொழியே யன்றி யாப்பானன்று. மூவகைப் பாவினங்களுள் துறை தாழிசை யென்னு மிரண்டுந் தமிழாயிருக்க, ஏனையொன்று மட்டும் வடமொழியாயிருத்தல் எங்ஙனம்? ஏனை மொழிகட்கெல்லாமில்லாத பரந்த யாப்பிலக்கணம் தமிழிலிருக்கவும், வடமொழியாப்பை வேண்டிற்றென்றல் விந்தையிலும் விந்தையே. "வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்" என்றார் சிவஞான முனிவரரும். ஆங்கில யாப்புப் பலவகைப் பாக் கூறுமேனும் தமிழ்போல அத்துணைப் பரந்துபட்டதன்று.

ஒரு மொழியானது காலஞ் செல்லச் செல்ல, அவ்வக் காலத்து மக்கள் இயல்பிற்கும் அறிவிற்கு மேற்றவாறு இலக்கியத்தினும் இலக்கணத்தினும் திரிதல் இயல்பே. அங்ஙனம் தமிழ் யாப்பும் சங்க காலத்திற் பாவாயிருந்து பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்தது.

எல்லாப் பாவினங்களும் கலிப்பாவினின்றே தோன்றியவாகும். வெண்பா, ஆசிரியப்பா என்னு மிரண்டும் பெரும்பாலும் வரம்பிறவாதன. வஞ்சிப்பாவும் மருட்பாவும் கலப்புப் பாக்களேனும், அவையும் அவற்றுக் கோதியவாறு ஒருவகை வரம்புபட்டனவே. ஆனால், கலிப்பாவோ ஒரு கட்டின்றி எல்லாவடியானும் எல்லா வோசையானும் பற்பல வுறுப்புப் பெற்று வரம்பிகந்து வருவதாகும். அதனுள்ளும் கொச்சகக்கலியோ ஏனைக் கலிகட்குரிய சீரும் எல்லையும் இகந்து,

ஆயும்,

"தரவின் றாகித் தாழிசை பெற்றும்

தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது"