உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகத்தியர் ஆரியரா? தமிழரா?

61

வர்க்கத்திலிருந்துகொண்டு பல தேவதோத்திரத் திரட்டாகிய வேதங்களை யியற்றினார்கள். பிற நூல்களெல்லாம் பெரும்பாலும் தமிழ்ச் சார்பிற் பிறந்தவை. ஆரிய வரவுக்கு முன்னரே தமிழர் முத்தமிழிலும் பல கலை களிலும் கைத்தொழில்களிலும் தலைசிறந்திருந்தனர். சிற்பம், கம்மியம், ஓவியம், கண்ணுள் வினை (Painting) முதலிய நுண்டொழில்களைக் கற்க யவன (கிரேக்கரும் சோனக (துலுக்கரும் வந்திருந்தனர். பின்பு தமிழ் தலை தாழ்ந்தது. காரணம் யாதோ அறிகிலம். பாண்டியர் தமிழ்ப் புலவரை ஆதரித்திலர் போலும். தமிழ்நூல்கள் பயிலப்படாது ஏட்டுச் சுவடிகளாய் மட்டுமிருந்தன. அக்காலை வந்தார் அகத்தியர்(கி.மு. 2500).

அகத்தியத் தமிழ்க் கிளர்ச்சி (The Augustian Revival of Tamil Literature)

அகத்தியர் என்னும் பெயர் அகஸ்தியர் என்னும் வடமொழிப் பெயரின் தற்பவம். விந்தமலையை அடக்கினவர் என்று அதற்குப் பொருள் கூறுவர். தமிழரோ செந்தமிழ்ப் பெயராகக் கொண்டு தமிழுக்கு அகத்திய மானவர் என்று பொருளுரைப்பர். அகத்தியர் தென்னாடடைந்ததைப்பற்றிப் பல வரலாறுகளுள. அவற்றுள் இரண்டு வருமாறு:

1. கைலாயத்தில் சிவபெருமான் திருமணத்திற்காகத் தேவரெல்லாங் கூடியபோது வடதிசை தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது. அன்று பூமியைச் சமப்படுத்துவதற்காகத் தேவர் வேண்டுகோட்படி சிவபெருமான் கட்டளை பெற்றுத் தெற்கே சென்ற அகத்தியர், தென்னாட்டில் தமிழர் வினவும் வினாக்கட்கு விடை யளிக்குமாறு சிவபெருமானிடம் தமிழ் கற்றுப் பொதியமலை சென்று அங்கு வதிந்தனர். இதனால் அகத்தியர் தமிழரல்ல ரென்பதும், அகத்தியருக்கு முன்பே தமிழிருந்த தென்பதும் பெறப்படும்.

2. ஒரு காலத்தில் காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தார் அகத்தியரை அவமதித்தனர். அதனால் அவர் மாறுகொண்டு முருகனிடம் சென்று வரங்கிடந்தனர். முருகன் அவர்க்குக் காட்சியளித்துச் சில ஏட்டுச் சுவடிகளைக் காட்டி, அவற்றால் தமிழை வளர்க்குமாறு பணித்தனர். அகத்தியர் அங்ஙனமே அச் சுவடிகளைக் கொண்டுபோய்ப் பொதியத்தி லிருந்து தமிழை வளர்த்தார். இதனால் அகத்தியர்க்கு முன்பே தமிழ் நூல்கள் ஒரு முறை கல்வி வழக்கற்றிருந்தனவென்றும், அகத்தியர் அவற்றை ஆராய்ந்து தமிழ் வளர்த்தா ரென்றும் அறியப்படும்.

ஆரியம் அக் காலத்தில் மிகத் திருந்தாமலும் நிரம்பிய நூல்களில்லா மலுமிருந்ததே அகத்தியர் தமிழைக் கற்றதற்குச் சிறந்த காரணமா யிருத்தல் வேண்டும். அதோடு உச்சரிப் பருமையாலும் வடமொழி உலக வழக்கிற்கு ஏற்றதாயில்லை.

அகத்தியர் தென்னாடடைந்தபோது குமரிநாட்டைக் கடல் கொள்ளவில்லை. அதன் தெற்கில் பஃறுளியாறும் மேற்கில் குமரிமலையும்