உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

பண்பாட்டுக் கட்டுரைகள்

வடக்கில் குமரியாறு மிருந்தன. பஃறுளி யாற்றங்கரையில் தென்மதுரை யிருந்தது. அதுவே அற்றைப் பாண்டியன் தலைநகர். அகத்தியர் முதனூல்களைத் தழுவித் தம் பெயரால் அகத்தியமெனப் பெயரிய ஒரு பெருநூலைச் செய்தார். அது முத்தமிழையுங் கூறும் பன்னீராயிரஞ் சூத்திரங் கொண்டது. அதன் பெருமைபற்றி அதைப் பேரகத்தியமென்பது வழக்கம். இதை யறியாதார் சிற்றகத்தியமும் ஒன்றிருந்ததெனச் சாதிப்பர். அங்ஙன மாயின் ஒரு முதுபூரணரும் ஒரு சிற்றாசிரியரும் ஒரு சிறுக

மிருந்திருத்தல் வேண்டும். சிறப்பியல்புபற்றி இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை வழக்காற்றிலு முண்டு. (cf. Akbar the Great; Queen Victoria the Good). இப்போது பேரகத்தியத்திரட்டு என வழங்கும் நூலிலுள்ள சூத்திரங்களிற் பல அகத்தியத்தைச் சார்ந்தனவல்ல; பிற்காலத்துச் சேர்க்கப்பட்டவை; ஆதலின் ஆராய்ச்சிக்காகா.

அகத்தியர் தமிழை வளர்க்குமாறு ஒரு சங்கம்(கழகம்) நிறுவி அதை ஆதரிக்கும்படி பாண்டியனை வேண்டினார். அவனும் ஆதரித்தனன். அதுவே தலைச்சங்கம். அஃது இருந்தது தென்மதுரை. அதற்கிலக்கணம் அகத்தியம். அதன் இறுதிக் காலத்தில் தொல்காப்பியர், அவிநயர் முதலிய பன்னிருவர் அகத்தியரிடம் தமிழ் பயின்றனர். அவருட் பெரும்பாலார் ஆரியர். தலைச்சங்கத்தில் அகத்தியர் இருந்தது மகேந்திர(குமரி) மலை. அங்கிருந்தே சிவபெருமானிடம் ஆகமங்களைக் கேட்டறிந்ததாகத் தெரி கிறது. பின்பு குமரிநாட்டின் இடைப்பகுதியைக் கடல் கொண்டது. (தென் பாகம் சிறிது காலமிருந்து பின்பு கடலில் அமிழ்ந்தது. அதுவே சூரபதுமன் ஆண்ட இடம். வடபாகம் இராமாயணத்திற்குப் பின்பு அமிழ்ந்ததாகத் தெரிகிறது.)

குமரிநாட்டைக் கடல்கொண்ட பின் பாண்டியன் தலைநகர் பொருநை (தாமிரபரணி) முகத்திலிருந்த கபாடபுரத்திற்கு மாற்றப்பட்டது. அகத்தியரும் தமது இருக்கையைப் பொதிய மலைக்கு மாற்றிக்கொண்டார். பொதியம் என்பது பொதியில் என்பதன் மரூஉ. பொது+இல் = பொதியில் = அம்பலம். (இலக்கணப்போலி.) அக்காலத்து ஆசிரியரெல்லாம் முனிவராதலின் மலைகளே இருக்கைகளா யிருந்தன. பொதியிலுக்கு மறுபெயர் மலையம். மலை என்னும் பொதுப்பெயரே அம் சாரியை பெற்றுப் பொதியிலைச் சிறப்பாய்க் குறிக்கும். பொதுப்பெயர் சிறப்புப் பொருளைச் சுட்டுவதை மலரடி என்னும் தொடரிற் காண்க. மலர் என்றது தாமரை மலரை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் அக்காலத்தில் குடமலை யெனப்பட்டன. மகேந்திரமும் பொதியமும் குடமலைப் பகுதிகளாகும். குடதிசையிலிருந்ததுபற்றி அகத்தியர் குடமுனிவர் எனப்பட்டார். அதை யுணராதார் குடத்திற் பிறந்தவரென்று புராணங் கட்டிவிட்டனர். அதன் பின்பு கும்பமுனி, கலசமுனி என அதன் இனமொழிகளாலும் பெயர் வழங்கத் தலைப்பட்டன.