உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்பாட்டுக் கட்டுரைகள்

76 கிழாரின் குடியினருள் ஒவ்வொருவனுக்கும் வேளாளன் என்னும் பொதுப் பொருளில் வழங்கினதுமுண்டு. அதே பொருளில்தான் அஃது இன்று இந்தியிற் கிசான் என்று வழங்குகின்றது.

சில பேரூர்க் கிழார்கள் அமைச்சரும் படைத்தலைவருமாகியும், அரசர்க்கு மகட்கொடை நேர்ந்தும் வேள் என்னும் பட்டம் பெற்றனர். அழுந்தூர் வேளும் நாங்கூர் வேளும் இதற்குதாரணமாவர்.

உழுவித்துண்ணும் வேளாளர்க்கு வணிகத் தொழிலுஞ் சிறுபான்மை யுண்டு. வணிகஞ்செய்வார் தொழில்பற்றி வணிகர் எனப்படினும் வேளாண் மரபைச் சேர்ந்தவராயின், அம் மரபிற்குரிய சிறப்புப் பெயர்களைப் பெறுதற்குரியர். மதுரையில் உருத்திரசன்மனாரின் தந்தையார் கிழார்ப் பட்டம் பெற்றதும், காவிரிப்பூம்பட்டினத்தில் திருவெண்காடர் பிள்ளைப் பட்டம் பெற்றதும் இவ் வுரிமை பற்றியே.

வேள் என்னும் பெயர் விரும்பப்படத் தக்கவன் என்னும் பொருளில் ஒரு தலைவனை அல்லது சிற்றரசனைக் குறிக்கும். நம்பன் என்னும் பெயரும் இதே பொருளில் ஒரு தலைவனைக் குறித்தல் காண்க.

"நம்பு மேவு நசையா கும்மே"

என்றார் தொல்காப்பியர்.

(தொல். சொல். உரி. 31)

சில கல்வெட்டுகளில் வேளான் என்னும் பெயர் படைத்தலைவர்க்குச் சிறப்புப்பெயராக வந்துள்ளது. அஃது ஆன்விகுதி பெற்ற வேள் என்னும் வேளான் குடிப்பெயரேயாகும்.

"மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப்

(தொல். அகத். 30)

என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரத்தானும் அதற்கு நச்சினார்க்கினிய ருரைத்த வுரையானும், வேளாளர் அமைச்சர், படைத் தலைவர் முதலிய அரசியல் வினைஞராதல் பெறப்படும்.

முற்காலத்தில் உழுதுண்பார் உழுவித்துண்பார் என்று கூறப்பட்ட இருவகை வேளாளரும் பிற்காலத்தில் பற்பல குலத்தினராகப் பிரிந்து போயினர். இதுபோதுள்ள வெள்ளாளரும் முதலிமாரும் உழுவித்துண்ணும் வேளாண் வகுப்பையும், குடியானவர், அகமுடையார், கவுண்டர், பள்ளியார், படையாட்சியர், பள்ளர் முதலியோர் உழுதுண்ணும் வேளாண் வகுப்பை யுஞ் சேர்ந்தவராவர். இவருள் ஒழுக்கத்திற் கடைப்பட்டவர் பள்ளர். இவரே முற்காலத்தில் மள்ளர் எனப்பட்டவர் என்பர் ஒரு சாரார் . இதை மறுத்துப் பள்ளத்தில் வேலை செய்பவர் பள்ளர் என்பர் மற்றோர் சாரார். மலையாள நாட்டிலுள்ள செறுமர் என்னும் வகுப்பாரும் உழுதுண்ணும் வேளாண் வகுப்பைச் சேர்ந்தவரே. செறுமர் வயலில் வேலை செய்வார்; செறு வயல்.

சில வேளாண் குடியினர்க்குக் கார்காத்த வேளாளர், கங்கைகுலத்தார், துளுவ வேளாளர் முதலிய பெயர்கள் கதையும் ஐதீகமும்பற்றிப் பிற்காலத் தெழுந்தவை.