உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

பண்பாட்டுக் கட்டுரைகள்

"முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்

எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப"

(சிலப். ப. 121)

என்பதால், மாதவி பெற்றதுபோலப் பாணரும் தம் திறமைக்கு 1008 கழஞ்சு பொன் பெறும் வழக்கமிருந்ததாகத் தெரிகின்றது.

11ஆம் புறப்பாட்டில், பாடினிக்குச் சிறந்த பொன்னணிக் கலத்தையும் பாணனுக்கு வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப் பூவையும் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

126ஆம் புறப்பாட்டில், மலையமான் திருமுடிக்காரி பகைவருடைய யானையினது (நெற்றிப்) பட்டத்திற் பொன்னைக்கொண்டு செய்த வாடாத பொற்றாமரைப் பூவைப் பாணரது தலைபொலியச் சூட்டியதும், 203ஆம் புறப்பாட்டில், சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பாணர்க்குப் பகைவர் அரண்களைப் போர்செய்து அழிக்கு முன்பே கொடுத்ததும் கூறப்பட்டன.

பாணர் இங்ஙனம் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனரேனும், பொதுவாக வறுமையால் வருந்தினரென்றும், வள்ளல்களைத் தேடி மலையுங் காடும் அலைந்து திரிந்தனரென்றும் கி.மு. 1000 ஆண்டிற்குக் குறையாத தொல்காப்பியமே கூறுகின்றது.

66

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்

சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்

(புறத். 36)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பாணர் வறுமையும், அவருள் ஒருவர் தாம் பரிசுபெற்ற வள்ளலிடம் அது பெறாத பிறரை ஏவி ஆற்றுப்படுப்பதும் கூறப்பட்டன. சங்க நூல்களிலும் தனிப்பாடல்களிலும் பாணராற்றுப் படைக்கு உதாரணங்கள் நிரம்பவுள.

இங்ஙனம் பண்டைக்காலத்தே பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும், அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளிற் பாண்டொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரியவர்ணாசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதுமே.

பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராகவே அரசரிடத்தும் பெருமக்களிடத்தும் அண்டமுடியாதுபோயிற்று. இவ் விழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட அடுத்தமை அவர்கள் சரித்திரங்களிற் காணலாம். பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் ஊக்குவாரின்றிக் கைவிட்டனர். அதனால் இசைத்தமிழ் அழிந்ததுடன் எஞ்சியுள்ள ஒருசில இசைத்தமிழ்ச் சூத்திரங்கட்கும் குறியீடுகட்கும் உண்மைப் பொருள் காண்டல் அரிதாய்விட்டது. இப்போது பாணரெனப் படுவார், மாடு தின்னாமையும் பிணப்பறை யடியாமையும்பற்றிப்