உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாணர்

85

பறையரினும் சற்று உயர்வாயிருப்பினும், தம் பண்டைத் தொழிலையும் பெருமையும் இழந்தவராயே உள்ளனர்.

பண்டைக் காலத்தில் பட்டத்தியானைமேல் ஏறி அரசருடைய விளம்பரங்களைப் பறையறைந்து நகரத்தார்க்கு அறிவித்த வள்ளுவரும் பாணர் அல்லது பறையரே. சாதாரணப் பறையர் பொதுமக்கட்கும், வள்ளுவர் அரசர்க்கும் பறையறைகிறவராயிருந்தனர். இதுவே வள்ளுவரின் ஏற்றத்திற்குக் காரணம்.

இன்றும் தென்னாட்டிற் சில சிற்றூர்களில் பறையர் கோயில் மேளம் என்னும் மணப்பறை பயில்வதையும் அதை மேல்வகுப்பாரில்லங்களில் இருவகை வினைகட்கும் வாசிப்பதையும் காணலாம். இசைத்தொழில் நடத்த முடியாத பாணரெல்லாம் குடைமுடைதல், மீன்பிடித்தல் முதலிய பிற தொழில்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆரியர் (பிராமணர்) முதன் முதலாய் வாய்ப்பாட்டும் நரப்புக் கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் பயில்கின்றனர். ஆயினும் 'நாகசுரம்' என்னும் துளைக்கருவியையும், 'தவல்' போன்ற தோற் கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படு தலான். 11ஆம் நூற்றாண்டு வரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் முதலால் இராசராச சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் நியமிக்கப்பட்டமையால் விளங்கும்.

ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில் பிராமணர் “பாட்டுப் பாடுவது, கூத்தாடுவ..... .இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி,வேத ஒழுக்கத்தினின்றும் தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில்,

"வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி”

என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.

(புறஞ்சேரி. 38 – 9)

ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்தது. இசையை மொழிப் பகுதியாக்கினது தமிழிலன்றி வேறு எம்மொழியினுமில்லை. ஆரிய வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசை யோடு கூடியதேனும், அவ் விசை பிறநாடுகளிற்போல் மந்திரத்திற்குரிய அளவு சாமானியமானதேயன்றித் தமிழிசைபோல விரிவாய் ஆலாபித்துப்