உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

பண்பாட்டுக் கட்டுரைகள்

பாடப்படுவதன்று.தென்னாட்டுத் தமிழிசையைப் பின்பற்றியே சமற்கிருதத் தில் இசைநூல்கள் பிற்காலத் தெழுதப்பட்டன. கி.பி. 5ஆம் நூற்றாண் டிலேயே முதன்முதலாய் வடமொழியில் இசைநூ லெழுந்ததென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமது கருணாமிர்த சாகரத்திற் கூறியுள்ளார். ஆகவே ஆரிய வேதத்தினின்றும் இந்திய இசை எழுந்ததென்பது அறியாதார் கூற்றே. வேத வொழுக்கத்திற்கு மாறான மேனாட்டு அறுவைமுறை மருத்துவத்தை எங்ஙனம் ஆரியர் பிற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனரோ, அங்ஙனமே தமிழர் இசையையும் முற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனர். வடநூல்களிற் கூறப்படாத பல தோற்கருவிகள் தமிழ்நாட்டி லிருந்தன. பல உயிர்களின் தோலையும் சவ்வையும் ஊறவைத்துக் கிழித்துப் பல்வகைப் பறைகட்குக் கட்டுவது பாணர்க்கே ஏற்கும். இசைவல்ல ஓர் வகுப்பார் இசைக்கருவிகள் செய்பவராயு மிருத்தல் வேண்டும். இசைநூற்கு இன்றியமையாத குறியீடுகளெல்லாம் இன்றும் தமிழிலுள்ளன.

இனி இக்காலப் பாணரைப்பற்றி தர்ஸ்டன்(Thurston) என்பார் தமது 'தென்னாட்டுக் குலமரபுகள்' (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தொகுத்திருப்பதைச் சுருக்கிக் கூறுவாம்:

தமிழப் பாணர் மேஸ்திரியெனவும் படுவர். இவர் திருநெல்வேலி, மதுரைக் கோட்டங்களில் தையற்காரராயுள்ளனர். இவர் வேளாளரையும் பார்ப்பாரையும் புரோகிதராகக் கொள்வர். இவர் வீட்டில் அம்பட்டரும் வண்ணாரும் உண்ணார். ஆயினும், கோயில் நுழையும் உரிமை இவர்க்குண்டு.

மலையாளப் பாணர் மந்திரவாதிகளும் பேயாடிகளுமா யிருக்கின் றனர். இவர் மந்திர வினைகள் பல்வேறு வகைப்பட்டவை. இவருள் ஆடவர் தாழங்குடை முடைவர்; பெண்டிர் மருத்துவம் பார்ப்பர். சிலவிடத்து மலையன் என்னும் பட்டம் இவர்க்குண்டு. அறுப்புக்காலத்தில் பாணச் சிறுவர் சிறுமியர் வீடுதோறும் சென்று குடையுடன் ஆடி இரப்பர். பயிர்பச்சை மீது அதிகாரமுள்ள பேய்கள் இவர் வயப்பட்டன என்று கருதப்படுகிறது. சில சடங்குகளில் பாணர் துடியியக்குவர். பறைக்குத் தோல் கட்டுவதும் இவர் தொழிலாம்.

பாணனான குருப்பு என்னும் மேல்வகுப்பம்பட்டன், தீயருக்கும், இறந்தோர் ஆவியை அவர் இறந்த அறையினின்றும் ஒரு சடங்கால் வெளிப்படுத்துவான். இவன் செறுமர்க்கு மேற்பட்ட தீண்டாதான்; தாழங்குடைக்கு மூங்கில் வேலை மட்டும் செய்வான். தாழை வேய்வது இவன் மனைவி. தன் மனைவியில்லாவிட்டால் அயல்வீட்டுப் பெண்டிரிடம் தாழை வேயக் கொடுப்பான்.

தீயர் பிணஞ் சுடும்போது பாணர் 5 நாள் இரவு பறையறைந்து தீயாவிகளை விரட்டுவர்.