உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

சொற் பொருள் வரிசை

சொற்கள், பொருட் டொகை பற்றி, 1. ஒரு பொருட்சொல் 2. பல பொருள் சொல் என இரு வகைப்படும். ஆயினும், ஒரு சொல்லின் முதற் பொருள் வழியாகப் பல்வேறு பொருள்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றுதற் கிடமிருத்த லால், ஒரு காலத்து ஒரு பொருட் சொல்லாயிருந்தனவும், பிற்காலத்துப் பல பொருட் சொற்களாகிவிடுகின்றன. ஒரு காலத்து ஒரு சொற்கு ஒரு பொருளே தோன்றுவது இயல்பாதலால், பலபொருட் சொற்களெல்லாம் முதற்கண் ஒரு பொருட் சொற்களாய் இருந்தனவே.

சொற்களின் பொருள் வரிசை, அதாவது பொருள்கள் முன்னும் பின்னும் தோன்றிய முறை 1. வரலாற்று முறை (Historical Sequence) 2., ஏரண முறை (Logical Sequence) என இருவகைப்படும். ஒரு சொல்லின் பொருள்களை, முதல் வழிசார்பு நூல்களில் அல்லது முன்னிடை பின்னூல் களில் அவை ஆளப்பட்டு வந்த வரன் முறைப்படியே ஒருங்குபடுத்துவது வரலாற்று முறையாம்; அஃதன்றி உத்திக்குப் பொருத்தமாக அவற்றை ஒழுங்குபடுத்துவது ஏரணமுறையாம். இந்தி போன்ற புதுமொழிகளிலும் ஆரியம் போன்ற முதுமொழிகளிலும் முன்னை அல்லது பண்டை இலக்கியம் அழியாதிருத்தலால் அதன்வாயிலாகச் சொற்பொருள்களின் வரலாற்று முறையை அறிதல் கூடும். ஆயின் பண்டை யிலக்கியம் முற்றும் இறந்துபட்ட தமிழ் போலுந் தொன் முதுமொழியில் அதனை அறியுமாறில்லை. ஆதலால், அத்தகைய மொழிச் சொற் பொருள்கட்கு ஏரண முறைதான் இயலும். ஒரு மொழியின் வளர்ச்சிக் காலத்துச் சொற்கட்கு ஒவ்வொன்றாய்த் தோன்றிய பொருட்கள், அவை தோன்றிய முறையே பிற்காலத்து உணர்த்தப்பெறா: அவ்வவ் இடத்திற்கேற்பவே உணர்த்தப்பெறும். ஒருவழங்கு மொழி என்றும் வளர்ந்து கொண்டேயிருப்பினும், அதன் பெருவாரிச் சொற்கள் ஒரு குறித்த காலத்திற்குள் அமைந்து விடுகின்றன. அதன்பின், தோன்றும் சொற்களும் பெரும்பாலும் புதுச் சொற்களாயிராமல் பழஞ்சொற்களினின்று அமையும் திரிசொற்களும் கூட்டு சொற்களுமாகவே யிருக்கின்றன, ஆதலால், முது பண்டயிலக்கியம் முற்றும் இறந்துபட்டதும். கருத்திற்கு மெட்டாக் காலந்தொட்டு வழங்கி வருவதுமான தமிழில், சொற்பொருள் வரிசை ஏரண முறைப்படி தான் அமைதல் இயலும். வரலாற்று முறை இயற்கையாகவும் ஏரண முறை செயற்கையாகவும் தோன்றினும் முன்னது உளநூன் முறைப்படி