உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

மொழிநூற் கட்டுரைகள்

கருநாடகம், மராத்தி, கூர்ச்சரம், (குசராத்தி) திராவிடம் என்னும் ஐந்தும் பஞ்ச திராவிடம் என்று வட நூல்களும் கூறின. இப்பட்டியில் திராவிடம் என்னும் பெயர் தமிழை மட்டுங் குறித்தல் கவனிக்கத்தக்கது. திராவிட(ம்) என்பது சில வட நூல்களில் திராவிர(ம்) என்றும் திரிந்தது. டகரம் ரகரமானது போலி. இதுகாருங்கூறியவற்றால், தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமையாகவும் குறித்து வந்த திரவிடம் என்னும் சொல், தமிழம் என்பதன் திரிபே என்பது, வரலாற்றுணர்ச்சி யுடையார்க்கெல்லாம் தெற்றென விளங்குதல் திண்ணம். ஆயினும், ஆனைக்கும் அடிசறுக்கும் என்னும் பழமொழிக்கேற்ப, கால்டுவெல் திரவிடம் என்னும் சொல்லே முறையே, (த்ரவிடம் - த்ரமிடம் - த்ரமிள தமிழ்) எனத் திரிந்ததென்று தலைகீழாகக் கொண்டார். ஆயின், கிரையர்சன் அதைத் திருத்தி உண்மையைக் கூறியது மகிழ்ச்சிக்குரியது. எனினும், இன்றும் சிலர் மயங்குவதற்குக் காரணம் வரலாற்றறிவின்மையே. ஆரியர் இந்தியாவிற் கால் வைத்து கி. மு. 3000 ஆண்டெல்லையென்றும், தமிழ் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழாய் வழங்கிய தலைக் கழகக் காலம் கி. மு. 10,000 ஆண்டெல்லையென்றும், அறியின், ஒருவரும் ஐயுறார் என்பது தேற்றம். வடமொழியில் நூற்றுக்கணக்கான தென் சொற்களிருந்தும் அவற்றை யெல்லாம் வடசொல்லெனக் காட்டுவதையே வடமொழி யகராதிகளெல்லாம் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன. வடமொழி தேவமொழியெனும் மயக்கு புலவருள்ளத்திலு மிருந்ததினால் கம்பர் அதைத் “தேவபாடை” என்றார். தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையில் (401) தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாதலானும் எனவுரைத்தார் சேனாவரையர். இத்தகைய நிலைகள், வடவர் திரவிடம் என்னும் சொற்குப் பொருந்தப் பொய்த்தலாகச் சில பொருட் காரணம் காட்டத் தூண்டின. த்ரு என்னும் வடமொழி வேர்துரத்துதற் பொருள் தருவதென்றும், ஆரியரால் தெற்கே துரத்தப் பட்டவர் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் ஒரு சாரார். திரவிடம் என்பது தெற்கு என்று பொருள்படுவதென்றும், தென்கோடி மாகாணத்தார் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் மற்றொரு சாரார். திரவிடம் தெற்கேயிருப்பதினாலேயே, திரவிடம் என்னும் சொற்குத் தெற்கென்னும் வழிப் பொருள் தோன்றிற்று. சிவஞான முனிவர் உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணும் முறையில், துரத்துதல் அல்லது ஒட்டுதல் என்னும் வேர்ப்பொருளை ஒப்புக் கொண்டு, தீவினை யகற்றும் அற நூல்கள் தமிழிற் சிறந்திருப்பது பற்றி, தம் காஞ்சிப்புராணத்தில்,

எவ்வினையும் ஒப்புதலால்

திராவிடம் என்றியல் பானட” என்று பாடினார்.

த்ரு என்னும் வடமொழி வேர் ‘துர’ என்னும் தமிழ் வேரின் திரிபே. இத்தமிழ் வேர் மேலையாரியத்தில் தியூத்தானியம் என்னும் கிளையிலும் சென்று வழங்குகின்றது.