உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தமிழ் முகம்

தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அகப்பகையாலும் புறப்பகையாலும், மறையுண்டும் குறையுண்டும் வந்திருந்தும் ஐரோப்பாவி லும் இங்கிலாந்திலும் ஒருசில நடுநிலை மொழியாராய்ச்சியாளர் தமிழ் முகம் திரும்பி அதன் தொன்மையையும் முன்மையையும் வடமொழிக்குச் சொல் வழங்கிய வன்மையையும் உணர்ந்து, அதை உலகினுக்குணர்த்த முன் வந்திருப்பது மிக மகிழத்தக்கதே. ஆயினும்; ஏமாற்றுவதிலும் அறை போவதிலும் துறைபோய ஒருசில புறத்தமிழரும் போலித் தமிழரும், இன்றும், முகம் என்னும் சொல் வடசொல்லென்று வலிக்கத் துணிவது எத்தனை இரங்கத்தக்க செய்தியாம்!

வடமொழிச் சொற்றொகுதிகளில் மட்டுமின்றி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும், பண்டாரகர் Dr. உ. வே. சாமிநாதையர் அவர்களின் குறுந்தொகையராய்ச்சிக் குறிப்பிலும், முகம் என்பது வட சொல்லெனக் குறித்திருப்பது, அதன் வடமொழி மூலக்கொள்கை விருப்பினர்க்குச் சான்றாய்த் தோன்றும்.

ஆங்கிலர் அவர்தம் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் ஆப்பிரிக்கமும் ஆத்திரேலியமும் போன்ற எத்துணைப் புன்மொழிச் சொற்கள் கலந்திருப்பி னும், அவை எம்மொழியின வெனத் தாமாகவே ஆராய்ந்து மகிழ்வொடு உண்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆயின், வடமொழியாளரோ, கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழரொடு தொடர்புகொண்டிருப்பினும், வடமொழியும் அதன் இலக்கண விலக்கியமும் தென்மொழியாலும் அதன் இலக்கணவிலக்கியத்தாலும் மிக வளம்படுத்தப்பட்டிருப்பினும், வடமொழியிற் கலந்துள்ள (ஆயிரக்கணக்கான அல்லாவிடின்) நூற்றுக்கணக்கான தென் சொற்களுள் ஒன்றுகூடத் தென்சொல்லென ஒப்புக் கொண்டிலர். ஆயினும், மகன் தந்தையைத் தந்தையென ஒப்புக்கொள்ளாவிடின், தந்தை தன் தந்தைமையிற் றிரியாமைபோல், தென்சொல்லும் தென் சொல்லென ஒப்புக்கொள்ளப்படாவிடினும் தன் தென் சொன்மையினின்று திரிந்துவிடா தென்க.

வடமொழி எக்காரணம் பற்றியும் பிறமொழியினின்று கடன்கொள்ளா தெனக் கூறல் வேண்டுமென்பது வடமொழியாளர் வன்கோளாதலின், அது அறிஞர் ஆய்விற்குரியதென அப்பால் ஒதுக்க.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும், வடநூலாரையே குருட்டுத்தனமாய்ப் பின்பற்றுவதானும், தமிழன்பராலும் தமிழ்மொழியறிஞ ராலும் தொகுக்கப் பெறாமையாலும், அதனையும் பொருட்படுத்தற்க.