96
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
குமரிநாட்டினின்று கங்கைக்கரை சென்ற பண்டைத் தமிழர் திரவிடராகத் திரிந்தபின், ஐரோப்பா வடைந்து ஆரியராக மாறி யிருப்பதாலும், அவ் வாரியருள் ஒரு கூட்டத்தாரே வேத ஆரியரின் முன்னோராக இந்தியாவிற்கு வந்திருப்பதாலும், தென்சொற்களின் முந்து வடிவங்கள் மேலையாரிய மொழிகளிலும் பிந்துவடிவங்கள் கீழையாரியமாகிய வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் வழங்குவது இயற்கையே.
மேலையர் உலக முதன்மொழியாகிய தமிழை அடிப்படை யாகக் கொள்ளாது அதன் திரிபு கொடுமுடியாகிய சமற்கிருதத்தையே மூலமாகக் கொண்டு ஆராய்ந்து வருவதால், மொழிநூல் பற்றிய அடிப்படை உண்மைகளை அறியாது வழிதப்பிய சகாராப் பாலைநில வழிப்போக்கர்போல் அங்குமிங்கும் சற்றிச் சுற்றி இடர்ப் படுகின்றனர். தமிழ் இயன்மொழியென்றும் ஆரியம் அதன் திரிமொழியென்றும் அறியும்வரை, அவர் தம் குருட்டுக் கொள்கையில் நிலைத்தே நிற்பர். அக் குருட்டாட்டம் நீங்குங் காலமும் அடுத்து வருகின்றது.