உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

பாவாணர் உரைகள்

பிராமணர்தாம் தென்னாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு முன்னாலே ஆரியம் அல்லது சமசுகிருதம் வருமுன்னாலே இருந்தத் தமிழ் நூல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. அதை நீங்கள் அறியவேண்டும். இக்கால் தலைக்கழக நூல் ஒன்றும் இல்லை; இரண்டாம் கழகத்தினதும் ஒன்றுமில்லை; மூன்றாம் கழகத்தின் நூல்கள் உள்ளன. இம் மூன்று கழகங்களினுடைய நூல்கள் காலத்தினால் மட்டுமன்றித் தன்மையாலும் பண்பாலும் கூடத் தலை, இடை, கடைப்பட்டவை. ஏனென்றால் அந்தத் தலைக் கழகக் காலத்திலே முத்தமிழா யிருந்தது என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு இலக்கண நூலும் மாபிண்டம் என்று சொல்கின்ற முத்தமிழ் நூலாக இருந்தது. ஒவ்வொரு புலவனும் முத்தமிழ்ப் புலவனாக இருந்தான். வரவரத்தான் இடைக்காலத்திலே, கடைசிக் கழகக் காலத்திலே, முத்தமிழ் வேறு பிரிந்தது. பிறகு பொரு ளிலக்கணம், பிற்காலத்தில் நன்னூலார் காலத்தில் விலக்கப் பட்டது. பிறகு மாணவருக்கு இலக்கணமே வேண்டாவென்ற முறையிலே வந்து விட்டது. இன்னும் சற்று முன்பு மொழியிலே செய்யுள் கற்பிக்கும் பொழுது அதனுடன் சேர்த்தே இலக்கணம் கற்பிக்கலாம் என்று வந்தது. கடைசியிலே இப்பொழுது இலக்கணமே வேண்டா; இலக்கியமே போதும்; அதிலே வாங்கிய மதிப்பெண்ணினாலே ஒருவன் தேறி விடலாம் என்ற கொள்கை இருந்து வருகிறது. இப்படிக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய், கட்டெறும்பு தேய்ந்து சிற்றெறும்பாய், அதுவும் தேய்ந்து ஒன்று மில்லாமற் போனது' என்கிற பழமொழிப்படி இப்பொழுது வந்திருக்கிறது.

இந்த நிலையிலே தொல்காப்பியம் ஒரு பழமையான நூல்தான். இருந்தாலும் அஃது ஆரியம் வந்த பிறகு ஏற்பட்ட நூல். அதிலே வடசொல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியரைப்பற்றிய குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ் நூல் அனைத்தும் அழிந்தன; அழிக்கப்பட்டு விட்டன. அதை அறிய வேண்டும் ஏனென்றால் சமசுகிருதத்திலிருந்து ஓர் உயர்வு வேண்டும் என்ற ஒரு முயற்சி நடந்தது. அந்த முயற்சி பல்யாக சாலை முதுகுடுமி என்ற ஒரு மன்னன் வேள்வியிலே ஈடுபட்ட பின் வெற்றி பெற்றது.

நம் நாட்டில் அந்தக் காலத்திலே உயர்தரமான மதங்களெல்லாம் இருந்தன. அந்தக் காலத்திலே மதத்தினில் மூவகை நிலை இருந்தது. அவையாவன. சிறு தெய்வங்களை வணங்கும் கடைப்பட்ட நிலை; பெரும் தெய்வங்களை வணங்குதல் (சைவம், வைணவம்) என்ற இடைப்பட்ட நிலை; உயர்ந்த சித்தர் மதமாகிய ஊர் பேர் குணங்களற்ற குறியற்ற உயர்ந்த கடவுள் நிலை. கடவுள் என்ற பெயர் ஆதியந்தம் கடந்த முழு முதற் பரம்பொருளைத் தான் குறிக்கும். பிற்காலத்திலே வந்த மகேசன் என்ற முறையிலே அந்தச் சொல் இழிவு பெற்றுச் சிறு தெய்வங்களுக்கும் கடவுள் என்ற பெயர் ஏற்பட்டுக் கடைசியில் ஆட்களுக்குக் கூட கடவுள் என்ற பெயர் வைத்து