உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

பாவாணர் உரைகள் படித்திருக்கிறேன். இதற்கு மேல் வேறு சில நூல்களையும், ஏரணம் போன்ற நூல்களையும் படித்திருக்கிறேன்.

தமிழிலே சொல் உண்டா, இல்லையா, என்பதற்கு முதலில் எதை அறிய வேண்டும்? சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியிலுள்ள சொற்களை எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதில் இல்லாத சொற்களும் பல இருக்கின்றன. உலக வழக்கில், அதற்கப்புறம் சொல் உண்டா, இல்லையா என்பதைப் பிறகு அறிய வேண்டும். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலிதான் நமக்கு முதல் படியாக இருந்து உதவ வேண்டும். இப்படிப்பட்ட அகரமுதலி, யாரால் தொகுக்கப்பட்டது, எப்படிப் பட்டது என்பது தெரியுமா? தமிழ் நலம் கருதாதவரால் தொகுக்கப்பட்டது அந்த அகரமுதலி. பணம், தமிழ்ப்பணம்; மொழி தமிழருடையது; நாடு தமிழருடையது. யானை கட்டித் தீனி போட்டது போல 29 ஆண்டுகள் அது நடந்தது. கடைசியில் பல தமிழ்ச் சொற்கள் அதில் இல்லவே இல்லை. இப்பொழுது ‘நீல்' என்பது நிறவடிவம்; நீன் என்பதுதான் முந்தின வடிவம். திருநெல்வேலியிலே முழங்குகிறது. ஆனால் இச்சொல் அதிலே இல்லை. வெளிப்படையாகவும், பச்சையாகவும் நான் சொல்ல விரும்புகிறேன். இல்லாவிட்டால், உங்களுக்குச் சரியாக விளங்காது. அதிலே தலைமையாக இருந்த ஆசிரியர் மு. இராகவய்யங்கார். அவர் தமிழ் அன்பர் என்று நான் கொள்ளவில்லை. ஆனால் அவர் என் பழைய நண்பர் தான். அவர் தொல்காப்பியத்திலே ஐயர் என்றசொல்லுக்கு-ஐயர் யாத்தனர் கரணம் என்பதற்கு-ஆரிய மேலோர் என்று எழுதினாரே அது ஒன்றே போது மானது. நான் ‘யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கொள்கை யுடையவன். ஆனால், கேளிர் என்றால் எனக்குக் கேளிராக இருக்க வேண்டுமே தவிர வாளிராக இருக்கக் கூடாது; வாட்களாக இருக்கக் கூடாது. நாம் அவர்களைக் கேளிராகக் கருவது போல அவர்கள் நமக்குக் கேளிர்களாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்கனாக இருந்தாலும் சரி; ஆத்திரேலியனாக இருந்தாலும் சரி; இங்கே வந்து தமிழைக் கற்று உண்மையிலேயே தமிழனாக இருந்தால் நாம் அவனைத் தமிழனாகத்தான் போற்ற வேண்டும். பரிதிமாற் கலைஞர் பிராமணராக இருந்தாலும் அவர் தூய தமிழர். மறைமலையடிகளுக்கும் அவர்க்கும் நான் கடுகளவும் வேற்றுமை காட்டுவதேயில்லை. ஆனால் போலித் தமிழராக இருந்தால் அவர்களைத் தமிழர்களுக்குப் புறம்பாகத்தான் வைத்திருக்கிறேன். நமக்கு குலம் வேண்டுவது; கருத்தன்று. இந்தக் காலத்திலே குலத்தை ஒட்டிப் பிரிக்க முடியாது. ஏனென்றால் நம் நாட்டிலும் குலம் கலந்துதான் கிடக்கிறது. ஆனால் மனப்பான்மை பற்றித்தான் நாம் ஒருவரை வேறுபடுத்த வேண்டும், அவர் தமிழரா அல்லரா என்பதை.