உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

பாவாணர் உரைகள்

பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் 'இல்லம்' என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு, நன்மை என்று பொருள் தருகின்ற ‘மங்கலம்' என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.

வீடுகட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனைநூலிலும் கூட, பிராமணர்களுக்கு உளுக்காத -உறுதியான மரங் களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மரவகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக உயர்ந்தவராகக் கருதப்பெற்ற முனிவர்களைக் குறிக்கும் 'அந்தணர்' என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள்.

இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த ஐயம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் - அஃதாவது கடைக் கழகக்காலம் வரையில்கூட ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கி யிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப்புலவர்களாகவும் விளங்கினர். காலப் போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான், ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்; எனவே ஆரியத்தினின்று விடுதலை பெற வேண்டும் என்றால் மதம் ஒழியவேண்டும் என்ற கொள்கையை நான் ஒருபோதும் ஒப்ப மாட்டேன். ஏனென்றால், சிவநெறி, திருமால்நெறி என்ற இரண்டும் தமிழர் மதங்கள். இதைத் 'தமிழர் மதம்' என்னும் எனது நூலில் விளக்குவேன்.

சிலர் நினைக்கலாம், நான் நூல்கள் எழுதி விற்பனைசெய்து அதன்வழி வரும் பணத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறேன் என்று. ஆனால் உண்மை அதுவன்று. நான் ஒரு பெரிய போராட்டத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றேன். இந்தப் போராட்டத்திற்கு இரண்டு குண்டுகள் அணியமாகி விட்டன. இன்னும் மூன்று குண்டுகள் எஞ்சி யுள்ளன. அவை வெளிவந்ததும் பெரும்பாலும் 1970-ல் ஒரு போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்திற்கு மாணவர்களும் இளைஞர்களும் அணியம் ஆகல் வேண்டும்.