உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

55

தமிழ்மொழி தாழ்த்தப் பெற்ற ஒரு மொழியாக விருந்தது. அது நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தக் காலத்தில் மேடை மேல் ஏறியவர்கள் எல்லாரும் ‘எனக்கு தமிழ்த் தெரியாது' என்று சொல்வதையே பெருமைக்கு ஒரு சான்றாக மதிக்கப் பெற்ற காலம் அது. அந்தக் காலத்திலே, ஆங்கில அறிஞராக ஒருவர் தோன்றினார், தமிழ்த் தொண்டராக! அவர்தாம் பேரா. சுந்தரனார். அவர்தாம் தமிழ்மொழி விழிப்பு உணர்ச்சியை முதன் முதல் தமிழர்களுக்கு ஊட்டியவர். அவர்தாம் தமிழுக்குப் பள்ளியெழுச்சி பாடினார் என்று சொல்லலாம். "நீராருங் கடலுடுத்த” என்னும் பாட்டு அது. “ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்” என்பது தான் அவர் பாடிய அப்பாட்டில் ஓர் உயிர் நாடித் தொடர். அந்த அடியைத்தான் இப்பொழுது ஒழித்து விட்டார்களே, அக்கருத்து ஒரு சாரார்க்குப் பிடிக்கவில்லை என்று! ஆகையினால் அந்தப் பாட்டைப் பாடாமலே விட்டு விடுவது நல்லது. அதை எழுதிய ஆசிரியரவர்கள் இந்தக் காலத்திலே இருந்திருப்பாரானால் அந்த நிலைக்கு மிக மிக வருந்தி யிருப்பார். ஒரு வேளை அதன் பொருட்டு அவர் உண்ணா நோன்பு கூட இருந்தாலும் இருந்திருப்பார். இப்படி அந்தப் பாட்டின் கருத்து மறைக்கப் பட்டிருக்கின்றது.

இக்கால், ‘அமுதசுரபி' என்னும் ஓர் இதழில் ‘அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று ஒரு கட்டுரை வந்ததாம். அக்கட்டுரையில் அந்தணர் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துக் கொண்டதே தவறு. அந்தணர் என்னுஞ் சொல் ஆரியர்களைக் குறிக்குஞ்சொல் அன்று. ஆனால் அதை ஆரியர்களைக் குறிப்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டு எழுதியுள்ளார் அதன் ஆசிரியர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் என்பவர். கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு மூலம் 'க்ருஷ்' என்பது அதற்குக் 'கருப்பு' என்பது பொருள். 'ருஷ்ணபக்ஷம் (கரும்பக்கம்) க்ருஷ்ணஸர்ப்பம் (கரும்பாம்பு) என்று வரும். க்ருஷ்ணன் என்றால் மாயோன். மாயோன் - கரியவன் என்பதையே மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை வடநாட்டுக் கண்ணன் என்பானும் கரியவனாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் தமிழன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. தென்மதுரை முழுகிப்போன பின் தென்னாட்டிலிருந்து போன தமிழ் மக்கள்தான் அங்குப்போய் மதுராபுரி என்று அங்குள்ள ஓர் ஊருக்குப் பெயரை வைத்துக் கொண்டார்கள். எப்படி ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போய், தங்களின் பழைய நாட்டை நினைவு கூர்வதற்காக 'இங்கிலாந்து' என்றால் 'நியூ இங்கிலாந்து' என்றும் ‘யார்க்கு’ என்றால் 'நியூயார்க்கு' என்றும் பெயர்களை வைத்துக் கொண்டார்களோ, அதே போல் தென்னாட்டிலிருந்து போன நம்மவர்களும் வட நாட்டுக்குப் போய் 'மதுரை' என்றே பெயர் வைத்தார்கள். இப்பொழுது அது 'மத்ரா' என்று வழங்கி வருகின்றது.