உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

பாவாணர் உரைகள்

இவ்வாறுதான் மாந்தத் தோற்றவரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. மாந்தன் தோன்றியது மேனாட்டிலே உள்ள ஏதேன் தோட்டத்திலேதான் என்று கிறித்துவர்களின் திருப்பொத்தகம் என்னும் பைபிளிலே சொல்லப் பெற்றிருக்கின்றது. அதைத்தான் மேனாட்டார்கள் நம்புகிறார்கள். இதற்கு நாம் இப்பொழுது ஒரு புது விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உண்மையானது எத்தனைக் காலமானாலும் அல்லது எத்தனைத் தடைகள் இருந்தாலும் எப்படியாகிலும் வெளிப்படத்தான் செய்யும் Oil and truth get upper most at last - என்பது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். ஆகவே நாம் முனைய வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஓர் உண்மையான ஆராய்ச்சியாளருக்கு ஆறு தகுதிகள் அமைய வேண்டும். கூர்மதி, பரந்தகல்வி இந்த இரண்டும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கின்றன என்று கூட சொல்லிவிடலாம். ஆனால் மற்ற நான்கு தகுதிகளாகிய நடுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்பவை மிக இன்றியமையாதவை. இவையில்லா விட்டால் ஒருவன் ஆராயவும் முடியாது; உண்மையை அறியவும் முடியாது. யாரைக் கண்டாலும் எங்கு அமைச்சருக்கு மாறாகப் போய் விடுமோ எந்த மேலதிகாரிக்காகிலும் வருத்தம் உண்டாகிவிடுமோ அல்லது ஓர் இனத்தாருடைய பகையைத் தேடிக்கொள்ளும்படி நேர்ந்து விடுமோ மேலும் மேலும் நம் பதவி உயர வேண்டும்; பணம் தொகுக்க வேண்டுமே என்றெல்லாம் கருதினால் ஒருவன் உண்மையான ஆராய்ச்சியாளனாக விருக்க முடியாது.

இந்தக் குமரிநாட்டு வரலாற்றை ஒப்புக்கொள்ளுகின்றதென்றால் அஃது ஓர் எளிய செய்தியன்று. ஆனால் அஃது உண்மை. உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்று நால்வகை அளவைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அவற்றுள்ளே இப்பொழுது காட்சியை நாம் காண முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் தெற்கே இருந்த குமரி நாடு இப்பொழுது கடலில் முழுகிக் கிடக்கின்றது. அவ்வாறு முழுகிக் கிடக்கின்ற நாடு முழுவதும் பாண்டியநாடு என்பதை நீங்கள் அறிய வேண்டும். அது தமிழ் நாடு மட்டுமன்று; அது பாண்டியநாடு. இந்தக் குமரி முனையிலிருந்து ஒரு கோடு வடக்கே இழுக்கப்பட்டால் கீழ்ப்பகுதியெல்லாம் சோழ நாடு, மேற்குப்பகுதியெல்லாம் சேரநாடு. தெற்கே முழுகிப்போன நிலம் முழுமையும் பாண்டி நாடு. அந்தப் பாண்டி நாடு முழுகிப்போன பின்னர்தான், அந்தக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியர்கள் இந்தச் சேரநாட்டின் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் ஒரு பகுதியையும் கைப்பற்றித் தங்களுடைய குடிகளுக்குக் கொடுத்தார்கள் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில் வரைந்திருக்கிறார். கருத்து (அளவை) என்பது உய்த்துணர்வது. ஒருவனைப் பார்த்து