உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

பாவாணர் உரைகள் ஆகவே இந்தத் துறையில் எவர் உண்மையான அறிஞர் என்று அறிதல் வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் நாம் இதுபோன்ற மாநாடுகளில் இடம் தருதல் வேண்டும். இந்தத் தனி நாயகம் அந்த உலகத் தமிழ்க் கழகத்திற்கு பிலியோசா என்னும் பிரெஞ்சுப் பேராசிரியர் ஒருவரையே தலைவராக வைத்திருக்கின்றார். அவர் சமற்கிருதம் படித்தவர். தமிழறியாத ஒருபெருமாள். அவர் எப்படிப் படித்தார் என்றால், இக்கால் ஆங்கிலம் போல் அக்கால் இந்தியா முழுவதும் சமற்கிருதந்தான் பொது மொழியாக இருந்தது. அதன்வழியாக அதனின்றுதான் தமிழ் வந்தது என்னும் - படி தமிழைப் படித்தார். இப்பொழுது அதைவிடக் கேடாக இருக்கிறது. வரவரக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவுந் தேய்ந்து சிற்றெறும்பாகி, பிறகு ஒன்றுமில்லாமற் போன வகையில், தேய்ந்து காய்ந்து தேரைக்கால் போல ஓய்ந்து வருகிறது இந்த உலகத் தமிழ் மாநாடு. அதுவும் முன்பு நடந்த பாரீசு உலகத் தமிழ் மாநாட்டில், மொகஞ்சதோரா நாகரிகம் திராவிடருடையதா ஆரியருடையதா என்று ஆராயும் பொறுப்பு யாரிடத்தில் ஒப்படைக்கப் பெற்றது தெரியுமா? நான் சொன்னேனே இந்த ஐராவதம் மகாதேவனிடத்தில். அஃதாவது பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்து தோன்றியதென்று சொன்னாரே அவரிடத்தில். இப்படியெல்லாம் செய்கிற பொழுது, அவர்கள் (காமில் சுவலெபில் போன்றவர்கள்) ஏன் அப்படி எழுதமாட்டார்கள் என்று கேட்கின்றேன். தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் நிமையத்திற்கு ஒரு முறை கொட்டும். இனி, ஒரு முறை மட்டுமன்று; மூன்று முறை, பன்முறையும் கூடக் கொட்டும். அதைப் பிடித்து வைத்துக் கொண்டு கொட்டுகிறதே கொட்டுகிறதே என்று சொன்னால் அந்த முட்டாளுக்கு நாம் என்ன சொல்வது? 'நன்றாகக் கொட்டட்டும்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி, தமிழுக்குப் பகைவர்களாகவே, வெளிப் படையாக அப்படி உள்ளவர்களையே கருத்து மாறுபாடுள்ளவர்களையே பார்த்துத் தலைவர்களாக வைத்திருப்பார்களா?

நீலகண்ட சாத்திரியாரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இந்தியாவிலேயே சிறந்த வரலாற்றறிஞர். அவருக்கீடாக ஒருவருமே இல்லை. அவர் அவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சிறந்த கருவி நூல்களை யெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். நூல் தொகுப்பில் அவரை டார்வினுக்கு அடுத்தபடியாகச் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு தமிழ்ப் பகைவர். வேண்டுமென்றே தமிழுக்கு மாறாக, உண்மைக்கு மாறாக எழுதி வைத்திருக்கிறார். சமற்கிருதத்தைப் பற்றியோ ஆரியத்தைப் பற்றியோ சொல்லுவதென்றால் துரும்பைத் தூணாக்குகிறார். தமிழைப் பற்றியோ தமிழர்களைப்பற்றியோ சொல்லுவதென்றால், தூணைத் துரும்பாக்குவது மட்டுமில்லை; ஒன்றுமில்லாத படி ஆக்கி விடுகின்றார். அவர் ஏராளமாக நூல்கள் எழுதியுள்ளார். முதலில் அவர், History of South India என்று ஒரு