உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

போலித் தமிழ்ப்பற்று

உலகிற் பல பொருள்கள் போலியாக வுள்ளன. பொதுவாக, வெளிப் பார்வையில் போலிப் பொருள்களே உண்மைப் பொருள்களினும் பொலிந்து தோன்றுகின்றன. இப் பொதுவியல்பு போலித் தமிழ்ப் பற்றாளர்க்கு விலக்கன்று.

(1) அயன்மொழிப் பெயர்

ஆரியர் வருமுன் தமிழர் பெயரெல்லாம் தூய தமிழ்ச் சொற் களாகவே யிருந்தன என்பதைச் சொல்லவேண்டுவதில்லை. அவர் வந்து ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்ட கடைக்கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர் பெயருள்ளும் தொண்டே (ஒன்பதே) முழுமையாகவோ பகுதியாகவோ வடசொல்லா யிருந்தன. அக் காலத்தில் மொழியாராய்ச்சி இன்றுள்ள வகையிலும் அளவிலும் இல்லை. ஆரியமும் பிராகிருதமுங் கலந்த வேதமொழியும், அதனொடு தமிழ்கலந்த சமற்கிருதம் என்னும் வடமொழியும், தேவமொழியென முற்றிலும் நம்பப்பட்டன. அங்ஙன மிருந்தும் ஆரியரொடு பழகிய தமிழ்ப் புலவருள் ஐந்திலொரு பகுதியினரே வடசொற்பெயர் தாங்கினர். ஆரியர் தொடர்பு சிறிதுமற்ற நாட்டுப்புறத் தமிழர் பெயர் பெரும்பாலும் தூய தமிழ்ச்சொல்லாகவே யிருந்திருத்தல் வேண்டும். எனினும், அன்றிலிருந்து 1916ஆம் ஆண்டு வரை, வடசொற்கள் தமிழ்ப் பேச்சிலும் இலக்கியத்திலும் தமிழின் தொண்டை நெரியுமளவு சிறிது சிறிதாய் மேன்மேலும் தொடர்ந்து கலந்து வந்ததினால், தமிழர் பெயரும் அந் நிலைமை யடைந்தன.

தமிழர்க்கு நற்காலமாக, 1916ஆம் ஆண்டு தவத்திரு மறைமலை யடிகள் வடசொற்களை அறவே களைந்து, தமிழ்ப்பயிர் மீண்டும் தழைத் தோங்குமாறு செய்தருளினார்கள். அன்றிலிருந்து தனித்தமிழ் கல்லாப் பொதுமக்களிடையும் கடுகிப் பரவி வருகின்றது. ஆயின், இந் நிலைமைக்கு முற்றும் மாறாக, தலைமைத் தமிழ்ப்பேராசிரியரும் தமிழ்க்காவலரும் தமிழ அமைச்சரும் வடசொற் பெயர் தாங்கிவருவது வியக்கத்தக்க வேடிக்கைச் செய்தியே. அவர் வடசொற் பெயர் தாம் தாங்குவது மட்டுமன்றித் தம் மக்கட்கும் பேரப்பிள்ளைகட்கும் இட்டு ஆரியமரபை அழியாது காத்து வருகின்றனர்.