உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலித் தமிழ்ப்பற்று

95

பேரா. பரிதிமாற் கலைஞன் பிராமணராயிருந்தும் தனித்தமிழ்க்கு வித்தூன்றித் தம் பெயரைத் தூய தமிழ்ச்சொல்லாக மாற்றிக்கொண்டார். தமிழ்ப்பெயர் தாங்காதவர் உண்மைத் தமிழ்ப் பற்றுற்றுள்ளவராக இருக்கவே முடியாது.

இம் மூவகையாரும், சிறப்பாகத் தமிழ்நாட்டு அமைச்சர், தாமும் தம் கான்முளையரும் தமிழ்ப்பெயர் தாங்காக் குற்றத்தை மறைக்க ஒருவழி கண்டுபிடித்திருக்கின்றனர். அஃது அரசியல் அலுவலகங்கட்கும் தாம் தங்கியிருக்கும் கட்டடங்கட்கும் தமிழ்ப்பெயரிடுவதே. ஐயறிவுள்ள அரிமாவும் வரிமாவும் கரிமாவும் நரிமாவும் முதலிய விலங்குகட்கும் தமிழ்ப்பெயர் சூட்டின் அவை இம்மியும் எதிர்க்காது ஏற்றுக்கொள்ளும். அங்ஙனமிருக்க, ஓரறிவுயிருமற்ற கட்டடங்கள் அமைதியாய் ஏற்காது என் செய்யும்? இனி, கட்டடங்கட்குப் பெயரிடுவதில் ஓர் ஏந்தும் (வசதியும்) உள்ளது. விலங்காயின், அவற்றின் கழுத்திற் கட்டித் தொங்கவிட்ட பெயர்ப் பலகைகளைச் சிதைத்துவிடலாம் அல்லது எங்கேனும் வீழ்த்திடலாம். கட்டடங்களோ பெருமழை பெய்தாலொழியப் பெயர் அழியப்பெறா; நிலநடுக்கம் உண்டானாலொழியப் பலகை சிதையப்பெறா.

இனி, நகரப் பேரியங்கிகளில் திருக்குறள் எழுதிவைப்பது அல்லது திருக்குறட்பலகை ஆணியறைந்து வைப்பதும், திருக்குறள் அறிவையோ, தமிழ்ப்பற்றையோ அவற்றில் ஏறிச்செல்வார்க்கு உண்டாக்கிவிடாது. முன்னும் பின்னும் நிற்கும் அல்லது இருக்கும் ஆள் தெரியாதவாறு சிறிதுநேரம் நெருக்கி நின்று, இறங்குமிடம் சென்று சேர்வதைக் கவனிப்பதி லேயே கண்ணுங் கருத்துமாயிருந்து ஏந்தாகச் சீட்டு வாங்கவும் இயலாத வழிப்போக்கர், திருக்குறட் பலகையிருக்குமிடங் கண்டு வாசித்து அதன் பொருளுணர்ந்து அதன்படி நடப்பர் என்பது, வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிப்பதை நம்புவதினுங் கேடானதே.

66

'ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்”

(குறள். 156)

என்னுங் குறளைப் படித்துப் பொருளுணர்ந்திருந்தால், சென்ற ஆண்டு மாணவர்க்கும் சென்னை மாநகரப் பேரியங்கித் தொழிலாளர்க்கும், இடை நிகழ்ந்த சச்சரவு நேர்ந்தேயிராது. குறள்நெறியைக் கைக்கொள்ளாமற் குறளைப் பார்த்தால் மட்டும் போதுமெனின், ஒவ்வொரு கட்டடத்திலும் சுவருக்கொரு குறளோ குறளதிகாரமோ எழுதி, சிறுகட்டடங்களில் ஓரீரியலையும் பெருங்கட்டடங்களில் ஓரிருபாலையும் மாபெருங் கட்டடங்களில் முப்பாலையும் முடித்துவிடலாம். மேலும், தனிப்பட்டவர் பேரியங்கிகளிலும் மாட்டுவண்டி குதிரைவண்டிகளிலும் ஒவ்வொரு குறள் அட்டை தொங்கவிடலாம்.

திருவள்ளுவர் கள்வெறியைக் கண்டிப்பதுபோன்றே கவறாட்டையுங் கண்டிக்கிறார். கவறாட்டுத் தன்மையுள்ள சீட்டாட்டெல்லாம் கவறாட்டே.