உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

செந்தமிழ்ச் சிறப்பு கலைமகளுமாயிருந்ததனாலும், அறிவை வளர்த்தல் அரசன் கடமையாத லாலும், பாண்டியர்க்குத் தமிழை வளர்த்துப் போற்றிக் காக்கும் கழகம் நிறுவாதிருத்தல் இயலவில்லை.

17ஆம் நூற்றாண்டிலிருந்த தளவாய் இரகுநாத சேதுபதி யென்னும் சிற்றரசர் பன்னிரு புலவரைப் போற்றிக் காக்கவும், இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர் புலவர் இரு வரைப் போற்றிக் காக்கவும் நூற்றுவர்க்கு மேற்பட்டவரை ஆட்டை விழாவிற் கூட்டவும் ஆற்றலரா யிருந்திருக்கவும், பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் இந்தியா அளவு நிலப்பரப்புள்ள குமரிநாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்ட பாண்டியனுக்குத் தமிழ்ப்பற்றும், புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்மரைப் போற்றிக் காக்கும் செல்வச் சிறப்பும் இருந்திராதென்று கொள்வது, எத்துணை இரங்கத்தக்கதாகும்!

தலைக்கழகத்தில் அகத்தியரும் தொல்காப்பியரும் இருந்ததில்லை. தலைக்கழகக் காலம் கி.மு. தோரா. 10,000-5,000. அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி.மு. தோரா. 1200. தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. தமிழின் முதுபழந் தொன்மையாலும், வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையினாலும், முக்கழக வரலாற்றில் முன்னவரையும் பின்னவரையும் ஒருகாலத்தவராக மயக்கிவிட்டனர். இதனால், கழகமே யிருந்ததில்லை யென்பது காட்டிக் கொடுக்குந் தன்மையைத்தான் காட்டும்.

நகர அடிப்படையிலும், மாவட்ட அடிப்படையிலும், மாநில அடிப்படையிலும், நாட்டு அடிப்படையிலும், பல்வேறு தமிழ்க் கழகங் களைத் தோற்றியிருப்பதை அறவே நீக்கிவிட்டு, பழம் பாண்டிநாட்டுத் தமிழ்க் கழகம் போன்று ஒரே உலகப் பொது மாபெருந் தமிழ்க் கழகம் நிறுவ வேண்டும். அதன் கிளைகள் பல்வேறிடங்களில் இருக்கலாம்.

நில வரம்பின்மை

தமிழர் பல நாடுகளிலும் தீவுகளிலும் குடியேறியிருப்பதால், தமிழுலகம் அனைத்தையும் தழுவிய தமிழ்க் கழகமா யிருத்தல் வேண்டும். தொகை வரம்பின்மை

தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்; இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மர், கடைக்கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர். நிலப்பரப்பிற் கேற்றவாறு புலவர் தொகை வேறுபட் டிருந்தது. மற்றப்படி, சிவனியப் புலவர் எழுவர், திருமாலியப் புலவர் எழுவர், சமணப் புலவர் எழுவர், புத்தப் புலவர் எழுவர், ஆரிய மதப் புலவர் எழுவர், உலகியல் மதப் புலவர் எழுவர், மதமற்ற புலவர் எழுவர் என்றோ, வேறு வகையாகவோ புலவர் தொகை அமையவில்லை. தகுதியுடையவர் அனைவரும் இடம்பெறல் வேண்டும்.