உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

தமிழன் உரிமை வேட்கை

உரிமை என்றால் என்ன?

மாந்தன் இவ் வுலகில் இருக்கை, காலந்தள்ளுகையும் வாழ்க்கையும் வாழ்வும் என முத்திறப்படும். வருமானம், நுகர்பொருள், உடல்நலம் முதலியன குன்றியிருத்தல் காலந்தள்ளுகை; அவை இன்றியமையாத அளவிருத்தல் வாழ்க்கை ; அவை அளவிறந்திருத்தல் வாழ்வு. இவற்றைப் புல்வாழ்க்கை, அளவு வாழ்க்கை, நல்வாழ்க்கை என்றுங் கூறலாம்.

வாழ்வும், உரிமை வாழ்வு, அடிமை வாழ்வு என இருவகைப்படும். தன் இல்லத்திற் குடியிருந்து, உடலுழைப்பாலோ மனவுழைப்பாலோ தானே தேடிய பொருளைக் கொண்டு, இறைவனடியார், விருந்தாளர், ஏழையுறவினர், இரப்போர், புலவர் ஆகிய ஐவகுப்பார்க்கு அளித்துண்டு, தன் தாய்மொழி இலக்கியச் செம்மொழியாயின் அதில் இயன்றவரை தூய்மையாகப் பேசியெழுதி, கடவுள் நம்பிக்கையிருப்பின் தன் தாய் மொழியிலேயே வழிபட்டு, தன் முன்னோர் வளர்த்த பண்பாட்டைப் போற்றிக்காத்து, பகுத்தறிவோடும் தன்மானத்தோடும் வாழ்வதே, தனிமகன் உரிமை வாழ்வு. தம் நாட்டில் அல்லது தமக்கென்றுரிய ஒரு தனிநிலப் பகுதியில் வதிந்து, மேற்கூறியவாறு வாழ்ந்து வருவதே ஒரு நாட்டினத்தின் அல்லது மக்கள் வகுப்பின் உரிமை வாழ்வு.

"தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்"

என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க.

(குறள். 1107)

கல்விக்கும் அயல்நாட்டுறவிற்கும் ஒரு மொழியைத் தெரிந்து

கொள்வதும், உரிமையின் பாற்பட்டதே.

மூவகை வாழ்க்கையும், உரிமையின்றேல் அடிமை வாழ்க்கையே.

தமிழனுக்கு உரிமையுண்டா?

தமிழன் என்றது இற்றைத் தமிழனை.

ஒரு வீட்டிற்கு ஆவணம் போல், ஒரு நாட்டிற்கு உரிமைச் சான்று உண்மையான வரலாறு. இந்த இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை, இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளதென்றும், இந்திய வரலாற்றைத் தெற்கினின்றே தொடங்க