உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை வேட்கை

121

ங்ஙனம், தமிழ் வரலாறு மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், தமிழ்மொழி தாழ்த்தப்பட்டும் வீழ்த்தப்பட்டும் இருப்பதால், தமிழ் அனைத்திந்திய ஆட்சி மொழியாகாதும், திருக்கோவில் வழிபாடு தமிழில் நடைபெறாதும் போகின்றன. இதனால் தமிழ் வளர்ச்சியும் தமிழன் முன்னேற்றமும் தடைப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் முன்னேறும் வழி மொழியே. அது தாய்மொழியாகவும் இருக்கலாம்; அயன் மொழியாகவும் இருக்கலாம். தாய்மொழியில் முன்னேற்றத்திற்கேற்ற இலக்கியமில்லாவிடின், அஃதுள்ள அயன்மொழியே முன்னேற்ற வழியாகும். இதற்கு, ஆப்பிரிக்க ஆத்தி ரேலிய அமெரிக்கப் பழங்குடி மக்களே தலைசிறந்த எடுத்துக்காட்டாவர்.

தமிழில் ஓரளவு பண்டையிலக்கியம் இருப்பினும், இக்காலக் கல்வி அறிவியமும் அதன் வழிப்பட்ட நுண்கம்மியமுமே யாதலால், மக்கள் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் போன்ற ஒரு மேலை மொழியறிவு இன்றியமையாததாகின்றது. அதனால், அது அயலாரால் வலிந்து புகுத்தப் படாது மக்களாலேயே விரும்பிக் கற்கப்படுகின்றது. இது அடிமைத் தனமன்று.

ஆயின், உலகில் வேறெங்கணும் காணமுடியாத ஒரு வேடிக்கையும் வியப்புமான மொழியடிமைத்தனம், இந் நாவலந் தேயத்தில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், கடந்த மூவாயிரம் ஆண்டாக இருந்துவருகின்றது. அது வேதமொழியும் சமற்கிருதமும் தேவமொழியென்பதும், அதை இலக்கிய வழக்காக வழங்குவோர் நிலத்தேவர் (பூசுரர்) என்பதும், அதினின்று ஏனை மொழிகளெல்லாம் கடன் கொள்ளுமென்பதும், அது மட்டும் வேறெம் மொழியினின்றும் கடன் கொள்ளாதென்பதும், அது பிராமணனாலேயே சரியாகப் பலுக்கப்படும் (உச்சரிக்கப்படும்) என்பதும், அதன் பலுக்கம் இம்மி திறம்பினும், பெருங்கேடு விளையும் என்பதும், அதிற் செய்யப்படும் வழிபாடே இறைவனுக்குப் பேரின்பந் தருவதென்பதும், பிராமணனுக்குத் தொண்டு செய்வதே அரசர், வணிகர், வேளாளர், கைத்தொழிலாளர் ஆகிய பிறவகுப்பாரெல்லாம் உய்யும் வழி யென்பதும், பிறவுமாம்.

இவ் வுலகில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர் மக்களே. ஆதலால், உலகமொழிகள் எல்லாம் மக்கள் மொழிகளே. வேத மொழியோ சமற் கிருதமோ தேவமொழியாயின், அவற்றோடு நெருங்கிய தொடர்புற்ற கிரேக்க மொழியும், அதற்கினமான இலத்தீனம், செருமானியம் முதலிய ஐரோப்பிய மொழிகளும் தேவமொழிகளா யிருத்தல் வேண்டும். அவை அங்ஙனம் இல்லை.

பிராமணரின் முன்னோர் வெண்ணிறத்தரா யிருந்ததனால் தேவ ரெனப் பட்டாரெனின், இன்று அவர் வழியினர். அந் நிறத்தராயில்லை. இன்று ஐரோப்பியரும் அவர் வழியினருமே நிலத்தேவர் எனப்படல் வேண்டும்.