உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

செந்தமிழ்ச் சிறப்பு

இவற்றிற்கிடையே வெவ்வேறு காலத்தில் துளு, குடகம் என்னும் திருந்திய மொழிகளும், தொதுவம், கோத்தம், கோண்டி முதலிய திருந்தா மொழிகளும் பிரிந்தன.

கால்டுவெல் கண்காணியார் திரவிட மொழிகளைப் பதின்மூன்றாகக் கணக்கிட்டார். இற்றை மேலை மொழிநூல் வல்லார் அவற்றொடு பர்சி, கோலாமி, நாயக்கி, ஒல்லாரி முதலியவற்றைச் சேர்த்துப் பத்தொன்பதும் மேலுமாகக் காட்டுவர்.

மலையாளத்தின் நால்நிலைகள்

மலையாளம் 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழாகவும், அதன் பின் 12ஆம் நூற்றாண்டு வரை கொடுந்தமிழாகவும், அதன் பின் 17 ஆம் நூற்றாண்டு வரை கிளைமொழியாகவும், இருந்து, பின்பு தனிமொழியாய்ப் பிரிந்துவிட்டது.

மலையாளத்தின் இடைநிலைமை

பழஞ் சேரநாட்டுத் தமிழே பல்வகையில் திரிந்தும் ஆரியத்தொடு கலந்தும் மலையாளம் என வழங்குவதாலும், இன்றும் அது ஆரியச் சொற்கள் நீங்கினவிடத்துப் பெரும்பாலும் தமிழாகத் திரும்புவதாலும், பழஞ் சோழ பாண்டி நாட்டுப் பகுதிகளாகிய இற்றைத் தமிழ்நாட்டில் வழங்காத பண்டைத் தமிழ்ச்சொற்களிற் பல மலையாள நாட்டில் முடங்கிக் கிடப்பதாலும், மலையாளியர் மனம் வைப்பின் இன்றும் கேரள (சேரல) நாடு தமிழ்நாடாக மாறும் வாய்ப்புண்மையாலும், மலையாள மொழி தமிழிற்கும் பிற திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட நிலைமை தாங்குவதாகும். தமிழின் தூய்மையும் திரவிடத்தின் ஆரியத் தன்மையும்

தமிழ் ஒன்றே வடமொழித் துணையின்றித் தனித்தியங்க வல்ல தென்றும், திரவிட மொழிகளுக்குள் மிகத் திருந்தியதென்றும், முது தொன்மை வாய்ந்ததென்றும், வழக்கற்ற பழந் திரவிடச் சொற்களையும் சொல்வடிவுகளையும் தன்னகத்துக் கொண்டுள்ளதென்றும், கால்டுவெல் கூறியிருப்பினும், இனத்தொடர்பு பற்றித் தமிழையும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளையும் திரவிடம் என்னும் பொதுப்பெயராற் குறித்தற்குள்ள தேவையை அவர் உணர்ந்தாரேயன்றி, தமிழினின்று பிற திரவிட மொழிகளை ஒரு தனிச்சொல்லாற் பிரித்துக் காட்டற்குள்ள தேவையை உணர்ந்தாரல்லர். அதற்குரிய சூழ்நிலையும் அக்காலத்தி லில்லை. தமிழுக்கும் பிற திரவிட மொழிகட்கும் உள்ள வேறுபாடுகளாவன;

தமிழ்

1. மெல்லோசை கொண்டது

2. வடசொற் கலப்பால் தாழ்வது

பிற திரவிட மொழிகள் மெல்லோசையும் வல்லோசையும் கொண்டன.

வடசொற் கலப்பால் உயர்வன.