உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசைத் தமிழ்

77

யாரும், சிஞ்சிரி (கஞ்சிரா)க்குத் தட்சிணாமூர்த்திப்பிள்ளையும் குணக் குரலுக்குப்(கொனுக்கோல்) பக்கிரிசாமிப் பிள்ளையும் நாகசுரத்திற்குப் பொன்னுசாமிப் பிள்ளையும் வெண்பாவிற்குப் புகழேந்திபோல் தத்தம் துறையில் தனியாற்றல் படைத்த எத்துணை ஒப்புயர்வற்ற வல்லுநர்! ஆயினும், தக்க அளவு அவர்கள் போற்றப்படவில்லை. தமிழர் அயலாரைப் போற்றித் தம்மவரைப் புறக்கணித்ததினால், தமிழ் இசைவாணர்க்குப் பெரும்பாலும் இசையரங்குகளில் இடமில்லாது போயிற்று. இதனால், தமிழும் தமிழரும் ஒருங்கு கெட்டனர். இன்று வானொலி நிலையங்களில் கூடத் தமிழ் இசைவாணர்க்குப் போதுமான இடமளிக்கப்படுவதில்லை யென்று எங்கும் முறையீடும் கூக்குரலுமா யிருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூற்றெழுவரான தமிழர் இங்ஙனம் தம் உரிமையும் மானமுமிழந்து எருமையினும் உணர்ச்சியற்று, இவ் விருபதாம் நூற்றாண்டில் கூலத்திற்குச் செலவும் ஞாலத்திற்குப் பொறையுமாயிருப்பது எற்றுக்கோ?

அழிந்துபோன இசை நாடக நூல்கள்

அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகை யோத்து, சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்ச பாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்களும்; முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து (இலக்கியம்), சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அந்தோ! அயலார் சூழ்ச்சியால் மீட்பற இறந்தொழிந்தன.

இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியம்

பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ், தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபாலகிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து, வழிநடைப் பதங்கள், நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் இதுபோது தமிழிலுள்ளன. இன்னும் வேண்டிய வகைகளெல்லாம் வேண்டியவாறே தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்; இன்று ஆக்கப்பட்டும் வருகின்றன.

இசைக்கு மொழிவரையறை யுண்மை

இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் ஒருவனது மகிழ்ச்சிப் பெருக்கம். அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக் கின்றான் நாகரிக மாந்தன். ஊமையரும் விலங்கு பறவைகளும்