உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

செந்தமிழ்ச் சிறப்பு

எம்மொழியிலாயினும் ஒருபொருட்கு அல்லது கருத்திற்குச் சொல் லிருக்கும்போது, அதை நெகிழவிட்டு அதற்கீடாக அயற்சொல்லை மேற் கொள்வது அறிவுடைமையாகாது. தமிழுக்கோ இவ் வரம்பு மிகக் கண்டிப்பானது.

அயற்சொற்களால் மட்டுமன்றி அயன்மொழிகளாலும் அளவிறந்து நெருக்குண்டு, இருப்பதா இறப்பதா என்னும் நிலையில் தமிழ் தத்தளிப்பது இக்காலம். இத்தகைய நெருக்கடியான நிலையில், பொறுப்பு வாய்ந்த புலவர் தமிழின் தூய்மையையும் நிலையையும் காக்கவேண்டியது கடன்.

தமிழுக்குக் கேடான பல அயல்நாட்டுக் கருத்துகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொள்ளத் தொடங்குங்கால், அவற்றைப் பெயர்த்தெறிவது தமிழ்ப் புலவர் கடமையாயிருக்க, அங்ஙனம் செய்யாது அவற்றை மேன்மேலும் வேரூன்றச் செய்வது அவர்க்குத் தகுமா? எது தமிழ் என்றும், எங்ஙனம் தமிழை வளர்த்தல் வேண்டும் என்றும், அறியாது மாணவர் இடர்ப்படும் இக்காலத்தில், தமிழ்ப் புலவரே தமிழைத் தளர்த்தற்கு அடிகோல்வது எத்தகைய கேடான செயல்.

புகளை

தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய பண்ட அறிதற்குப் பிற்காலத் தமிழாகிய புராணத் தமிழும் கல்வெட்டுத் தமிழும் உறுதுணை செய்யா; மேற்கணக்கு நூல்களையும் உழவர் தமிழையும் நோக்குதல் வேண்டும். இங்ஙனம் நோக்காது மனம் போனவழி பேசுவதும் எழுதுவதும், ஒருவனுக்குப் பகைவர் அவன் வீட்டாரே” என்னும் மறைமொழியையே மெய்ப்பிக்கின்றது.

ஏதேனும் ஒரு புதுக்கருத்துத் தோன்றினால் அல்லது கொள்ளப்பட் டால், அதற்கு ஏற்கெனவே உள்ள பழஞ்சொல்லினின்றே புதுச்சொல் திரித்துக்கொள்ள வேண்டும். இதுவே திருந்திய 'மொழி'யிற் கையாள வேண்டிய நெறிமுறையாகும்.

Radius என்னும் பழஞ் சொல்லினின்று Radio என்னும் புதுச்சொல், ஆங்கிலத்தில் திரிக்கப்பட்டிருத்தல் காண்க.

புதிய மேலைக் கலைக்கருத்துகளை யுணர்த்தத்தக்க புதுச் சொற்களை ஆக்கிக்கோடற்கு வேண்டிய கருவிச் சொற்கள், தமிழில் நிரம்பவுள. புதுக்கருத்துகளை யுணர்த்தும் புதுச்சொற்களைப் புனைதற்கே தமிழ் வளம்பெற்றிருக்கும்போது, பழங்கருத்துகளை யுணர்த்தும் பழஞ்சொற்களைத் தள்ளிவிட்டு அவற்றுக்குப் பதிலாக அயற்சொற்களைப் புகுத்தித் தமிழின் தூய்மையைக் குலைத்தற்குத் தமிழ் எங்ஙனம் இடந்தரும்!

ஆகவே, சபாஷ் சலாம் என்ற அயற்சொற்களால் தமிழுக்குப் பெருந் தீங்கேயன்றிச் சிறு நன்மையுமில்லை யென்றும், தமிழில் அயற்சொற் புகுத்துவதை விரிந்த மனப்பான்மை யென்று வியப்பவர் விலைமகளின் விரிந்த மனப்பான்மையை வியப்பவரே என்றுங் கொள்க.

“செந்தமிழ்ச் செல்வி" மே 1949