உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

3

களையும் புன்செய்ப் பயிர்களையும் நன்றாக விளைவித்து, நிலையாக வாழ்ந்து, நாளடைவிற்சிற்றூர் பேரூரும், பேரூர் மூதூரும் ஆகி, கைத்தொழிலும் வாணிகமும் வளர்ந்து, கல்வியும் அரசும் நகரும் நகரமும் தோன்றி, மக்கள் நாகரிகம் அடைதற்கேற்ற இடம், நிலவளமும் நீர்வளமும் மிக்க மருதநிலம்; அதற்கடுத்த படியாக, பலவகை மரக்கலங்கள் புனைந்து கடல் கடந்து நீர்வாணிகஞ் சய்து பல்வகைப் பண்டங் கொணர்ந்து நாட்டை வளம்படுத்துவதற்கு ஏற்ற இடம், கடல் சார்ந்த நெய்தல்நிலம். இந்நால்வகை நிலமும் அடுத்தடுத் திருந்ததும் இன்றும் இருப்பதும், முறையே, முழுகிப்போன குமரிக் கண்டமும் இற்றைத் தமிழகமுமே.

பாலை யென்பது, முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முது வேனிற் காலத்தில் நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு நிலமுஞ் சுடும் நிலை. பின்னர் மழைக்காலத்திற் பாலைநிலம் தளிர்த்தும் நீர் நிரம்பியும் மீண்டும் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். ஆதலால், ஐந்திணைகளுட் பாலைக்கு நிலையான நிலமில்லை. அதனால், ஞாலத்தை நானிலம் என்றனர்.

இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே, பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும், மேல் கோடியிலேயே ஒரு பன்மலையடுக்கத்துப் பெருமலைத் தொடரிருந்தது. அது குமரி யென்னும் காளியின் பெயராற் குமரிமலை யெனப்பட்டது. அதன் தென்கோடியிற் பஃறுளி யென்னும் கங்கை போலும் மாபேரியாறும், வட கோடியிற் குமரியென்னும் காவிரி போலும் பேரியாறும், தோன்றிக் கிழக்குமுகமாய்ப் பாய்ந்தோடின. நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால் குடதிசை மேல்திசை (மேல்- மேற்கு) யென்றும், குணதிசை கீழ்த்திசை யென்றும் (கீழ்-கீழ்க்கு- கிழக்கு), பெயர் பெற்றன. இற்றைத் தமிழகத்திலும் ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்து அடுத்தடுத்திருக்கக் காண்பான். நண்ணிலக்கடல் (Mediterranean Sea) ஒரு காலத்தில் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியிற் (Pacific Ocean) கலந்ததாகத் தெரிவதால், விவிலியத் தொடக்கப் பொத்தகத்திற் கூறியுள்ளவாறு, ‘ஏதேன்’ தோட்டம் என்னும் மாந்தன் பிறந்தகம், மெசொப் பொத்தாமியா நாட்டில் இருந்திருக்க முடியாது. ஏனெனின், அந் நிலப்பகுதி பண்டு கடலாயிருந்திருக்கும்.