உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சு

தமிழ் இலக்கிய வரலாறு

உண்மையறியின், அங்ஙனங் கூறார். எடுப்பிலா வொலி எடுப் பொலியாக மாறுமேயன்றி, எடுப்பொலி எடுப்பிலாவொலியாகத் திரியாது. பிஞ்சு முற்றிக் காயாவதே யன்றி, காய் இளந்து மீண்டும் பிஞ்சா வதில்லை. மாந்தன் வரலாற்றில் தமிழன் சிறுபிள்ளை போன்றவனாதலின், அவன் வாயிற் பிற்கால மாந்தரின் வல்லொலி கள் எழவில்லை.

தமிழிலுள்ள சகரம், சமற்கிருதக் கிசுகிசுப்பொலிகளுள் (Sibilants) முதலதையே ஒத்ததாகும். அதை எடுப்பும் மூச்சொலியு முள்ள (Voiceless Unaspirate) சமற்கிருத அண்ண வல்லெழுத் திற்குச் (Palatal Surd) சமமாகக் கொள்வது. தமிழியல்பை அறியாமை யேயாம்.

ழ, ற பொதுமக்களே தோற்றுவித்த ஒலிகளாதலால், அவை தனித்தும் சொல்லுறுப்பாகவும் வரும்போதெல்லாம், அவற்றை அவர்கள் முழுச் செவ்வையாகவே ஒலித்து வந்தனர்.

சொற்புணர்ச்சியும் பொதுமக்கள் செயலே. தெற்குத் தெரு, கற்றாழை, முதுமக்கட்டாழி, பாற்சோறு, ஆட்டை வாரியம், அற்றைக் கூலி, கருமக்குறை என மூவகைத் திரிபு புணர்ச்சியையும், பேச்சிலும் எழுத்திலும் இறுகக் கடைப் பிடித்தனர்.

பொருட்பாகுபாடு

எல்லாப் பொருள்களையும் உயிர், மெய், உயிர்மெய் (உயிரோடு கூடிய மெய்) என மூன்றாகப் பகுத்தும்; அவற்றுள் உயிரை நிலைத்திணை இயங்குதிணை என இரண்டாக வகுத்தும்; அவற்றுள் நிலைத்திணையைப் புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனப் பலவாகப் பாகுபடுத்தியும்; அவற்றின் உறுப்புகளை வேர், தூர், அடி, கவை, (கொம்பு, கிளை, போத்து, குச்சு) இலை, பூ, காய் எனப் பிரித்தும்; அவற்றுள் இலையைத் தாள், தோகை, ஓலை, தோடு, இலை, அடை என்றும்; பூவை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்றும், காயைப் பிஞ்சு, பிருக்கு, காய், கனி, நெற்று, வற்றல் என்றும்; நுண்ணிய வகையில் வேறுபடுத்தியும்; பிஞ்சையும் கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா) குரும்பை (தென்னை, பனை) எனத் தனித்தனி சிறப்புப் பெயரிட்டும் வழங்கினர்.

பொருள்களைப் போன்றே வினைகளையும் நுண்ணிதாக வேறுபடுத்தி, சிறப்புச் சொற்களால், அவற்றைக் குறித்தனர்.